
தவெக விழாவில் நடனமாடிய தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி.
தவெக நடத்திய விழாவில் சினிமா பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஒரத்தநாடு பகுதியில் சமீபத்தில் தவெக சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்து கொண்டார். அத்துடன் அந்த மேடையில் விஜய் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அரசு பள்ளி ஆசிரியை அரசியல் கட்சி நிகழ்ச்சியில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில் அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறியது குறித்து விசாரணை நடத்த பட்டுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகனுக்கு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்டய முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணவேணி, தவெக விழாவில் பங்கேற்றதுடன் அந்த மேடையில் நடனமாடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடத்தை விதிகளை மீறியதாக கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



