ஸ்ட்ராங் ரூமில் தவெக ஆதரவாளர் செய்த சம்பவம்… தட்டித் தூக்கிய போலீஸார்!

சென்னையில் வாக்கு எண்ணும் மையத்தில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படடுள்ளன. சென்னையில் ராணிமேரிக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்களில் 16 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இதில் அண்ணா பல்கலைக்கழக மையத்தில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கேமராக்களை கண்காணிக்கும் அறையில் யுவராஜ் என்பவர் பணியாற்றியுள்ளார். இவர் தனது லேப்டாப்பில் விஜய் நடித்த இன்னும் திரைக்கு வராத, ‘ஜனநாயகன்’ படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார்.

அத்துடன் திரைப்படத்தை பார்த்த போது அதை செல்போனில் பதிவு செய்துள்ளார். அத்துடன் அவருக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் இந்த 2 காட்சிகளையும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் யுவராஜ் பதிவிட்டுள்ளார். அத்துடன் “ஓட்டு பெட்டி வர இடத்துல கூட நம்ம தளபதிதான். மொத்த சென்னையும் இப்ப நம்ம கண்ட்ரோல்” ன்னு பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சென்னை மாநகராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியான சைலேந்திரா, கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.யுவராஜ் தவெக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை முழுமையாக கவனிக்கும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *