
முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் எடப்பாடி பழனிசாமி ஒரு புறமும், எஸ்.பி.வேலுமணி ஒருபுறம் என இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்தவராவார். இவருடன் இன்னும் சில அதிமுக எம்எல்ஏக்கள் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களான திலீபன் ஜெய்சங்கர், சுகுமார், ஹரிபாஸ்கர், மோகன், நடராஜன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.



