மோடியிடம் கெஞ்சுவது மாநில சுயாட்சிக்கு எதிரானது… விஜய்க்கு அப்பாவு கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடுவதற்கு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கெஞ்சுவது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று அப்பாவு கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரான தவெக தலைவர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (மே 27) சந்தித்தார். அப்போது மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு தமிழ்நாடு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அப்பாவு கூறுகையில்,” மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் சில நீக்கங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் 23.11.1970-ல் அரசாணை வெளியிடபட்டது. தொடர்ந்து வந்த எல்லா முதல்வர்களும் அதனை நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்று அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று மாண்புமிகு பிரதமரிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது. இதைப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, “அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே” என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. சுக்கையும் மிளகையும் யாரும் யாருக்கும் கொடுக்கலாம் வாங்கலாம். ஆனால் சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என்பதே அதன் பொருள். இன்று தமிழக அரசுக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல்”என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *