
தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வடக்கு தமிழகம், தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு- தென்கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று (மே 28) கனமழை வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(மே 29) மழை நீடிக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் வட, உள் தமிழக பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை நாளை (மே 29) உயரக்கூடும். மேலும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.



