
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் கார் பந்தயங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இவரது தந்தை சுப்ரமணியம் மணி கடந்த 2023-ம் ஆண்டு காலமானார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக இன்று (மே 30) காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மோகினி உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்ற அஜித், தற்போது துபாயில் இருப்பதாக தெரிகிறது. தாயார் இறந்த செய்தி கிடைத்ததும் அவர் தமிழ்நாட்டிற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் குமாரின் தாயாரின் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



