அது என்ன தலைமைச் செயலகமா, தவெக அலுவலகமா?: வானதி சீனிவாசன் கேள்வி

சென்னை கோட்டையில் இருப்பது அரசின் தலைமைச்செயலகமா, தவெக அலுவலகமா என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் நேற்று( ஜூன் 3) சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை இடைத் தேர்தலில் 1 இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்வதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரான முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ” தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இது அவர்களது விருப்பம். ஆனால், கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூட்டணி பேரம் பேசியிருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை கோட்டையில் இருப்பது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமா அல்லது தவெக தலைமை அலுவலகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *