
தவெக கூட்டணிக்கு பிரவீன் சக்கரவர்த்தி பெயர் சூட்டியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிக எம்எல்ஏக்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனக்கான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. அக்கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் பிரவீன் சக்கரவர்த்தி. இந்த நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் எம்.பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.. பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த பதிவை அதிக பிரசங்கித்தனம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கெனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள பதிவை அதிக பிரசங்கித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.



