
தவெகவுக்கு வாக்களித்த அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கமா என்பது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மே 10-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13-ம் தேதி தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். திமுக வெளிநடப்பு செய்தது.
இதைத் தொடர்ந்து தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைச் 25 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று (ஜூலை 9) செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக உறுப்பினர்கள் 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, அவரிடம் இருந்து 4 கடிதங்கள் வந்துள்ளன. அதன்பின்னர், 21 உறுப்பினர்கள் அளித்த விளக்கத்தை ஏற்று, அவர்களை மன்னித்து விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையடுத்து அவர் வழங்கிய 4 கடிதங்களை முறையாக ஆய்வு செய்தேன். எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தபடி, உறுப்பினர்களின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடுகிறேன். எஞ்சிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். அதன்படி, உறுப்பினர்கள் எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மீது நடவடிக்கை தொடங்கி விட்டது. என்ன நடவடிக்கை என்பது பிறகு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



