திமுக கூட்டணியில் இருந்து விலகல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

திமுக கூட்டணியில் விலகி விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் மு.வீரபாண்டியன், இன்று (ஜூன் 11) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர முடியாத நிலையில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் அணியாகச் சேர்ந்து இயங்க முடியாது என்பதால் திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டது. தற்போது திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. இதை விட அழுத்தமாக சொல்ல முடியாது. மேலும் கூட்டணி ஆட்சியில் தற்போது இல்லை. தவெகவுக்கு வெளியில் இருந்துது தான் ஆதரவு.

தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் தவிர்த்து மற்றவர்கள் எங்களுக்கு நட்பு சக்திதான். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூடும். எந்த ஜனநாயக அணியுடன் சேர வேண்டும் என்பது அப்போதைய சூழலைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும். முதல் பிரதமர் நேருவை விட அதிக நாட்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியை புகழ்கின்றனர். அதற்காக நேருவை வசைபாடுகின்றனர். நேரு தான் நாடு பின்னோக்கிச் செல்ல காரணம் என்று கூறுவது சரியல்ல. பின்தங்கியிருந்த இந்தியாவை. ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் முன்னேற்றங்கள் அடைய செய்தவர் நேரு.

டெல்லியில் பிரதமரை ஏன் சந்தித்தோம், எதற்கு சந்தித்தோம் என்பதை முதலமைச்சர் விஜய் சொல்ல வேண்டும். ஊடகங்களைச் சந்தித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். ஊடகம், பத்திரிகைகள் இல்லாமல் எதுவும் இல்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அன்று உள்ள சூழல் குறித்து முடிவு செய்வோம்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *