
திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் பகுதியில் வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது. இதனால் தங்களது குழந்தையை பொதுமக்களின் உதவியுடன் அந்த பெற்றோர் தேடினர். அப்போது ஒரு முட்புதரில் காயங்களுடன் அந்த குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிஹாரைச் சேர்ந்த தொழிலாளி பிபின் மஞ்சி உள்ளிட்ட 4 பேர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்து சென்றது தெரியது. இதையடுத்து பிபின் மஞ்சியை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கும்மிடிப்பூண்டியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமறைவாகியுள்ள மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



