இப்போது விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது?: ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்த சி.விஜயபாஸ்கருக்கு ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி. விஜயபாஸ்கர், கட்சியின் தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். வருகிற 22-ம் தேதி முதலமைச்சர் விஜய் பிறந்த நாளன்று தவெகவில் விஜயபாஸ்கர் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சி.விஜயபாஸ்கரை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ” விஜயபாஸ்கர் இந்தக் கட்சிக்கு வருவதற்கு முன்பாக தனக்கும் தன் குடும்பத்திற்கும் இருந்த சொத்துகளையும், தற்போது அவர் வைத்திருக்கும் சொத்துகள் மற்றும் முதலீடுகள் அனைத்தையும் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு வேறு கட்சிக்குப் போவாரா என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் உள்ளது.

கட்சியில் வாங்கிய பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள். இரட்டை இலை மூலமாக வந்த வெற்றியை ராஜினாமா செய்துவிட்டீர்கள். அப்படியென்றால், நியாயப்படி கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்த நிலைக்குத் தானே நீங்கள் செல்ல வேண்டும்? அதிமுகவில் இருந்து பதவிகளை அனுபவிப்பீர்கள், சொத்துகளைச் சேர்ப்பீர்கள், செல்வாக்கை வளர்த்துக் கொள்வீர்கள். எல்லாவற்றையும் சேர்த்த பின்னர், தலைமையை விமர்சித்து, கட்சியை விமர்சித்து, தொண்டர்களையும் மக்களையும் கைவிட்டு விடுவீர்களா?

உங்களது சுயநலத்திற்காக, உங்கள் முதலீடுகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீங்கள் கட்சியைக் காட்டிக் கொடுப்பீர்கள் என்றால், தொண்டர்கள் எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்? எங்களின் வயிறு எரிகிறது அல்லவா? அம்மா வளர்த்த கட்சி, எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, புரட்சித் தமிழர் எடப்பாடியார் என்ற சாமானியரின் தலைமை சரியில்லை என்று நீங்கள் பதிவு செய்கிறீர்களே., கடந்த 10 ஆண்டுகளாக அவரது காலைப் பிடித்து எத்தனை விஷயங்களைச் செய்தீர்கள்? இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?

இப்படியே நீங்கள் செய்து கொண்டே இருப்பீர்கள், நாங்கள் வாயை மூடிக்கொண்டு மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் என்ன ஏமாளிகளா? இப்போது விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது? எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வளர்த்த இந்த இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கும் சுயநலவாதிகளுக்கு காலம் தகுந்த பாடம் புகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *