பிணவறையில் அத்துமீறி நுழைந்து ‘ரீல்ஸ்ʼ: தவெக தொண்டர் கைது

சென்னை அரசு மருத்துவமனை பிணவறையில் ரீல்ஸ் எடுத்த தவெக தொண்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தீனா (எ) தினேஷ்குமார் (30) ஆகியோர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த எர்ணாவூரைச் சேர்ந்த பல்லு ஆனந்த் என்பவரின் உடலைப் பார்க்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, பேட்டரி வாகன ஓட்டுநரான சங்கருக்கு லஞ்சமாக 200 ரூபாய் கொடுத்து, சவக்கிடங்கு ஊழியர் சீனிவாசன் மூலம் சாவியைப் பெற்றுள்ளனர்.

பின்னர் சவக்கிடங்கிற்குள் நுழைந்த அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பல உடல்களைத் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மருத்துவ அலுவலர் வனிதா மலருக்குத் தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின்பேரில், மருத்துவமனை காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமார், தினேஷ்குமார், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு பிரபலமாவதற்காகவே இந்தச் செயலில் அவர்கள் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். அரசு சவக்கிடங்கிற்குள் அத்துமீறி நுழைந்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், பின்னர் அவர்களை பிணையில் விடுவித்தனர். மேலும், இந்தச் சம்பவத்திற்குத் துணையாக இருந்த சவக்கிடங்கு ஊழியர் சீனிவாசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *