
உங்கள் ஆட்சியைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள் என்று முதலமைச்சர் விஜய்க்கு மு.கஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள வானகரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் பேரனும், திமுக எம்.பி கலாநிதி வீராசாமியின் மகனுமான சித்தார்த்- ஆஷ்ரயா திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதன் பின் அவர் பேசுகையில்,” 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்த போது ஆர்க்காட்டார் எங்களோடு இருந்தார். சிட்டிபாபு எந்த அளவிற்கு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் சென்னை சிறைச்சாலையில் நடைபெற்றது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் சிறையில் நிம்மதியாக தெம்போடு திராணியோடு இருந்தேன் என்று சொன்னால், அதற்கு ஆர்க்காட்டார் காரணமாக இருந்தார்.
இன்றைக்கும் என்னுடைய கையில் மிசா தழும்பு இருக்கிறது. அதேபோன்று ஆர்க்காட்டார் இன்றைக்கும் ஒரு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் பட்ட அந்தக் கொடுமையின் காரணத்தால் தான் அந்த நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். எனவேதான் வைரம் பாய்ந்த ஒரு தொண்டன் ஆர்க்காட்டார் என்று கலைஞர் பலநேரங்களில் சொல்லியிருக்கிறார்.
ஒரு மாநிலக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது.ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. ஆனால்,, 75 ஆண்டு காலம் கொண்ட கொள்கைக்காக லட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடும் திமுகவில் இன்றைக்கும் எத்தனையோ பேர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சோசியல் மீடியா இன்றைக்கு எந்த அளவுக்கு பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த சோசியல் மீடியா ஒரு அளவுதான்; நாளடைவில் அதெல்லாம் மறைந்து போகத்தான் போகிறது. இன்றைக்கு சோசியல் மீடியாவை பார்க்கிறபோது, கோட் போட்டு வந்தார்; கையில் டிஃபன் கேரியர் எடுத்து வந்தார்; வாட்ச் கட்டி வந்தார்; செஸ் விளையாடினார்; இன்றைக்கு கோட்டு போடவில்லை; பட்டு சட்டை , வேஷ்டியில் வந்தார். இதெல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருந்தன. அவை எல்லாம் மறைந்து, நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவரை பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள். அதில் இருக்கும் உண்மையைக் கண்டுபிடிங்கள். அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்” என்றார்.



