
தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் அல்லது புதிய அரசு பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அரசின் கொள்கைகள், புதிய திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள், எதிர்கால செயல் திட்டங்கள் தொடர்பாக ஆளுநர் தனது உரையில் தெரிவிப்பார். அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றுவதற்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அத்துடன் ஆளுநர் உரையும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று (ஜூன் 18) காலை 9.50 மணிக்கு சட்டமன்றத்திற்கு வரும் ஆளுநருக்கு போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். சபாநாயகர், சட்டமன்றச் செயலாளர் ஆகியோர் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.. தொடர்ந்து சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வரும் ஆளுநர், கூட்டத்தில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். குறிப்பாக, 2023-ம் ஆண்டு, முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை. இதனையடுத்து, அந்த வார்த்தைகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநர் பாதியிலேயே புறப்பட்டு சென்றார். இதே போன்று, 2024-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து உடனடியாக தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். பின்னர், அந்த உரையை அப்போதைய பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்து அவைக்குறிப்பில் பதிவு செய்தார்.
கடந்த ஆண்டும், முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் ஆதாரமற்ற பல தகவல்கள் இருந்ததால் வெளிநடப்பு செய்ததாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. அமதன் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் அர்லேகர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



