நெடுஞ்சாலைத்துறையில் மறுசீரமைப்பு குளறுபடி: பட்டய பொறியாளர் சங்கம் கண்டனம்

நெடுஞ்சாலைத்துறையில் மறுசீரமைப்பு குளறுபடிக்கு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் சென்னையில் மட்டும் தலைமைப் பொறியாளர் அலுவலகம் இருந்ததை மாற்றி சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை என மண்டல தலைமைப் பொறியாளர் பணியிடமாக கடந்த 13.03,2026-ல் நெடுஞ்சாலைத்துறையில் அரசாணை எண் 43 மூலம் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த அரசாணையில் நபார்டு(ம) கிராமச்சாலைகள் திட்டங்கள் மற்றும் பெருநகர அலகுகள் என மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை 15.06.2026 முதல் நடைமுறைக்கு கொண்டு வர அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி தலைமைப் பொறியாளர் மண்டல அலகில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் துவங்க 14.06.2026 வரை எந்த முயற்சியும் எடுக்காமல் 15.06.2026 அன்று மெயில் மூலம் ஒரே நாளில் அனைத்து புதிய அலுவலகமும் துவங்கப்பட்டுள்ளதாக அறிக்கையை அரசு உயர் பொறியாளர்களால் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் கட்டுமானம் மற்றும பராமரிப்பு அலகுகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள பணியிடம், மற்ற அலகுகளுக்கு ஒதுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு கண்காணிப்பாளர் பணியிடம் உள்ளது. இதுவே நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் உட்கோட்டத்தில் இப்பணியிடமும் அனுமதிக்கப்படவில்லை.

புதிய அலுவலகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என வரையறை செய்து அரசாணை பெற்றால் தான் ஊதியம் பெறமுடியும். அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யாமல் பல்வேறு குளறுபடிகள் உள்ள நிலையில் 15.06.2026-ல் துவங்கியதாக கணக்கு காட்டி ஒரே அலுவலகத்தில் இரு அலுவலகமும் செயல்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய அலுவலர்களை விதிக்கு புறம்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு 15.06.2026-ல் உடனே செல்லுமாறு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. மேலும் யாரும் மருத்துவ விடுப்பு எடுக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலால் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசாணை 43 வெளியிட்ட 13.03.2026 முதல் 14.06.2026 வரை தலைமைப் பொறியாளர் நிலையில் இருந்தவர்கள் இதை அமல்படுத்தாமல் உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த அரசாணைக்கு சட்டரீதியாக எந்த தடையும் வழங்கவில்லை.

எனவே, 90 நாட்களுக்கும் மேலாக அவகாசம் இருந்தும் எந்த முயற்சியும் எடுக்காமல் 15.06.2026 அன்று ஒரே நாளில் அனைத்து அலுவலகமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என அறிக்கை அனுப்புவது கேலிக்கூத்தாக தெரிகிறது.புதிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் நான்கு மாதம் வரை காலதாமதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அரசாணையை அமல்படுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *