ஒரு கதை 17: வேறு என்ன தான் செய்ய?

துயரங்களின் சாம்பல் படிந்த இரவுகள் எவ்வளவு குரூரமானவை. அதிலும் வெள்ளை வெயில் பகலெல்லாம் உக்கிரமாக படிந்து கிடந்த நிலத்தில் இறங்கும் கருப்பு இருள் அச்சமூட்டக்கூடியதாகத்தானே இருக்கிறது. வாழ்ந்து செழித்திருந்த ஊரில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வது எத்தனை துரதிஷ்டமானது. கிணறுகள் நீரற்றுப்போன ஊரில் கால்நடைகள் எப்படி உயிர் தரித்திருக்க முடியும். காடோ, பரதேசமோ என கிளம்பிப் போவதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் தென்படாத ஊரில் இருந்து என்ன செய்துவிட முடியும். கொட்டி மழை பெய்து தீர்த்த ஊரில் விவசாயம் செழித்திருக்கும். ஆடு மாடுகளும் மனிதர்களும் அதனதன் இயல்பில் வாழ்வினைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். சொட்டு நீருக்காக நாவினை அண்ணாந்து தொன்னாந்து வான வெளியில் நீட்டிக்கலைத்துப்போகும் நிலை வந்தால் அங்கிருந்து என்ன செய்வது?

ஊர் விட்டு அகன்று பசித்துக்கிடக்கும் வயிறுகளின் தீராத கோபத்தைச் சாந்தப்படுத்திட தொலைதூரம் செல்லத்தானே வேண்டும். எழுதித் தீர்க்க முடியுமா பசியின் துயரத்தை. தமிழகத்தின் புனைவிலக்கியப் பரப்பினில் எழுதப்பட்ட தாது வருஷப் பஞ்சத்தின் கதைகள் கணக்கற்றவை. வடக்கிலிருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்கிற்குமாக பெரும் மக்கள்திரள் குழந்தைகளை இடுப்பிலும் குறைவான சுமைகளைத் தலையிலுமாக சுமந்தலைகின்றனர். நம்பிக்கைப் பிடிகயிறுகளை காற்றில் தேடியலைந்தபடியான மனிதக்கூட்டத்தின் காட்சி அந்த நாட்களின் துயரச் சித்திரமாக வரலாற்றின் பக்கங்களில் படிந்திருக்கிறது. அந்த காரிருள் நாட்கள் இனி ஒருபோதும் இந்த நிலத்தில் அச்சத்தை விதைத்படி விடிந்து விடக்கூடாது என்றே எல்லோரும் நினைக்கிறோம். கதைகளாகக் கடக்கிறபோதுகூட துக்கத்தை தாங்க முடியாமல் தந்து போன பஞ்ச காலத்தின் கதைகள் மிகவும் வலி நிறைந்தவை. அப்படியான கதைகளில் மிக மிக தனித்த கதையே எஸ்தர்.

தன்னுடைய சிறுகதைகளின் வழியாக அசாத்தியமான இடத்தை அடைந்திருப்பவர் எழுத்தாளர் வண்ணநிலவன். எழுபதுகளில் பொங்கிப் பெருகிய தமிழ்ச்சிறுகதைப் பேராற்றின் தனித்த குரல் வண்ண நிலவனுடையது. சிறுகதைகளை அதுவரை அறிந்த முறைகளில் அல்லாது தனித்த தொனியில் எழுதியவர் அவர். அவருடைய கடல்புரத்திலே எனும் நாவல் கடற்கரையோரத்து மனிதர்களின் அன்றாடங்களுக்குள் உறைந்திருக்கும் அன்பு,கருணை மட்டுமல்லாது நேர் எதிரான மனதின் கீழான குணங்களையும் விசாரனைக்கு உட்படுத்திய நாவல். அவருடைய கரையும் நிழல்கள்,பாம்பும் பிராடனும் போன்ற சிறுகதைகள் மிக அபூர்வமானவை. எல்லோரும்தான் கதை எழுதுகிறார்கள். ஆனால் எஸ்தர் கதையை வண்ண நிலவனைத் தவிர வேறு எவராலும் எழுத முடியாது என்பதை எஸ்தர் கதையை வாசித்த மறுநொடியில் எல்லோராலும் உணர முடியும்.

புறவெளியின் காட்சிகளை கலைத்தோ அல்லது வரிசையாக அடுக்கியோ கதையென ஒன்றை எழுத்துக்காரர்கள் எழுதி குவித்தபடியே இருக்கிறார்கள். அது இன்றுவரையிலும் நீடித்தபடியே இருக்கிறது. துக்கமோ மகிழ்வோ அது மனித மனங்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கண்டறிவதில்தான் ஒருகதையின் தனித்த வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படியான கதைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் வண்ண நிலவன். சிறுகதையின் நிபுணர் வண்ண நிலவனின் தேர்ந்த சிறுகதை எஸ்தர்.

“முடிவாக பாட்டியையும்,ஈசாக்கையும் விட்டுச்செல்வது என்று ஏற்பாடாயிற்று. பிழைக்கப் போகிற இடத்திற்கு பாட்டி எதற்கு? அங்கு வந்து அவள் என்ன செய்யப்போகிறாள். நடமாட முடியாது. காது கேளாது..” இது எஸ்தர் கதையின் முதல்வரிகள்..முதல் வரியில் துவங்கிய கதையின் ஓட்டம் ஊரை,ஊரின் காடுகரைகளை,இடிந்த கிணறுகளை, தாகமெடுத்து துடித்தலையும் கால்நடைகளை, கால்டைகளுக்குச் சமமாக பசித்த வயிறுகளைச் சுமந்து அலையும் மனிதக்கூட்டத்தைக் காட்சிப்படுத்துகிறது. நகர்ந்து ஊர்ந்து செல்லும் கதையின் வரிகள் இப்படி முடிகின்றன. “எஸ்தர் சித்திக்கு மட்டும் பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் மேற்கூரையைப் பார்த்து நிலை குத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. வெகுகாலத்திற்கு அவள் அந்தக் கண்களை மறக்கவேயில்லை’ என கதை முடிகிறது.

இந்த இரண்டு நீண்ட பெரும் வரிகளுக்கு இடைட்யே நிரல்பட்டிருக்கும் எஸ்தர் கதையை ஒரே மூச்சில் எவராலும் படித்துவிட முடியாது. துயரம் கொப்பளிக்கும் வாழ்வின் பக்கங்களை வாசித்துக் கடக்க முடியாமல் நிச்சயம் மனம் தடுமாறித்தான் போகும். முதல்வரியில் காட்சிப்படுகிற பாட்டிதான் அந்த வீட்டின் அச்சாணியாக இருந்தவள். அவளுடைய கவனிப்பில்தான் மொத்த குடும்பமும் செழித்திருந்தது. அந்த வீட்டில் கடைசியாகப் பிறந்த பேத்தியைக்கூட அவள்தான் சீராட்டி வளர்த்தாள். பசியால் புழுவென எல்லோரும் நெளியும் வீட்டில் அவள் இன்று வேண்டாத சுமைகளில் ஒன்றாகிவிட்டாள். பாட்டியை என்ன செய்வது என்று அந்த வீட்டில் இருக்கிற ஆண்களும், பெண்களும் ஏன் குழந்தைகளும்கூட ரகசியமாக பாட்டிக்கு கேட்காதவாறு பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். எஸ்தர் சித்திதான் ஈசாக்கை பாட்டிக்கு துணையாக வைத்துவிட்டு ஊரைவிட்டு எல்லோரும் வெளியேறுவது என்ற முடிவைச் சொல்கிறாள்.

பாட்டிக்கு இயலாமல் போனபிறகு எஸ்தர் சித்திதான் இங்கு எல்லா முடிவுகளையும் எடுக்கிறாள். யாவரும் ஏற்றுக்கொண்டு, அதன்படி நடக்கிறார்கள். ஈசாக்கை துணையாக வைத்து விட்டுச் செல்வது என்று எஸ்தர் சொல்லிவிட்டாளே தவிர, ஏன் இப்படி யோசித்தோம் என அவளுடைய மனம் தடுமாறியது. ஈசாக் இந்த வீட்டில் எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டு காடே கதியென ஒடுங்கிக் கிடப்பவன்.ஊரில் மருந்திற்குக்கூட பசுந்தாவரங்கள் இல்லை. அரிசிச்சோற்றை செழிக்கச் சாப்பிட்டு பழகிய வீட்டில் இப்போது கேப்பைக் கூழுக்கும் வழியற்றுப் போய்விட்டது. மழையில்லை, விவசாயமில்லை, கஞ்சிக்குக்கூட வழியில்லை. ஊர் கொஞ்சம், கொஞ்சமாக காலியாகிக் கொண்டிருக்கிறது. மிஞ்சியது எஸ்தர் வீட்டைப் போல இன்னும் இரண்டு வீடுகள் மட்டுமே. அவர்களும் வெளியேறும் நாள் இன்றோ, நாளையோ தெரியவில்லை. ஈசாக் பாட்டிக்குத் துணையாக இருக்கச் சொன்னதில் எந்த நியாயமும் இல்லை என்று எஸ்தர் தனக்குள் மருகுகிறாள். யாருமற்ற ஊரில் காற்றைக் குடித்து மட்டும் ஈசாக்கால் எத்தனை நாள் உயிர் வாழ்ந்துவிட முடியும் என்று யோசித்தபடியே இருக்கிறாள். யோசித்து யோசித்து சிந்தனையே வற்றிவிட்டது. எதாவது ஒன்று அது நல்லதோ,கெட்டதோ செய்யத்தானே வேண்டும். வேறு வழியே இல்லாததால்தான் எஸ்தர் இப்படி செய்திருக்கிறாள்.

ஒரு கதை ஆகச்சிறந்த கதையாக உருமாறுவது அந்தக்கதைக்குள் வருகிற மனிதர்களும் இயற்கையும் உறவாடுவதை விவரிக்கும் சித்தரிப்புகளால்தான் ஆகிறது. எஸ்தர் கதையை வெயில், மழை, இருள் எனும் மூன்று புள்ளிகளுக்கு ஊடாகத்தான் நகர்த்துகிறார் வண்ண நிலவன். “ஊருக்குள் எல்லோருக்கும் தேவையானதாக இருந்த காட்டிற்குள் இப்போது எதுவுமில்லை. ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் சுள்ளென வெறித்து வீழ்கிறது. மஞ்சள் வெயிலுக்கு பெரும் மழையைக் கொண்டுவந்து சேர்க்கும் பேராற்றல் உண்டு என்பதை ஈசாக் கதையில் சொல்லிக் கொண்டேயிருப்பான். அலுமினியத்தை உருக்கி ஊற்றியது போலான வெயில் மாலை மசங்கிய பிறகும் அகலாமல் இரவு ஏழு மணிவரை அடித்து இம்சிக்கிறது. ஒருநாள் அல்ல இரண்டுநாள் அல்ல நீண்டு தொடரும் ஆண்டுகள் பலவாக அடித்து துன்புறுத்தும் வெள்ளை வெயில் அந்த ஊரையே வெம்பரப்பாக்கிவிட்டது. இப்படியான ஊரில் இனிமேல் என்ன இருக்கிறது என ஊர் தன்னையே காலி செய்து கொண்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது.

சின்ன ஊர்தான் அது. அந்த ஊருக்கு மட்டுமேயான இரண்டு சின்னக்கடைகள் இருந்தன. அவையும் மூடிக்கிடக்கின்றன. கழுதைகளும் மூச்சிரைத்து வாழத் தகுதியற்றுப் போய்விட்ட இந்த ஊரில் எஸ்தர் குடும்பம் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறது. இங்கிருந்து கிளம்பிப் போவதைத் தவிர மாற்றுவழியின்றி தடுமாறுகிற குடும்பத்தின் பெரும் சுமையாக பாட்டி இருக்கிறாள். . துயரத்தின், வறுமையின் உச்சத்தை கதைக்குள் கடத்திட வண்ணநிலவன் காட்சிப்படுத்தும் சித்திரங்கள் வாசித்துக் கடக்க முடியாதவை.

“அநியாயமாக பீடி குடிப்பதற்காகவே அந்த நெருப்புப்பெட்டியில் இருந்த ஒற்றை தீக்குச்சியை எஸ்தர் சித்திக்கு சத்தம் கேட்காதவாறு டேவிட் மிக மெதுவாக உரசுகிறான். எப்படி கருப்பு இருட்டில் நெருப்பின் நிறத்தை எவராலும் ஒளிக்க முடியும். சித்தி வந்தே விட்டாள். டேவிட்டையும் அவன் கையில் புகைகிற பீடிக்கங்கையும் உற்று பார்க்கிறாள். இதன்பிறகு அந்த வீட்டில் நெருப்பிற்கு இடமேயில்லை என்பது எஸ்தருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் உள்ள எல்லோருமே அறிந்ததுதான். நாளை வெள்ளை வெயில் விழுவதற்கு முன்பே கிளம்ப வேண்டும். டேவிட் மனம் உக்கிப் போய்விட்டான்.

இருளைக் கிழிக்கும் கையிலிருந்த ஒற்றைத் தீக்குச்சியை பாழ்படுத்திவிட்ட தன்னைப் பார்த்து கோபமாக ஏதோ கேட்கப் போகிறாள் என நினைத்தான். எஸ்தர் சித்தி எதாவது திட்டியிருந்தால்கூட டேவிட் மன சமாதானம் அடைந்திருப்பான். அவள் எதுவும் சொல்லாமல் போனது டேவிட்டுக்கு என்னவோ போல் இருந்தது. கையில் கசிந்து கொண்டிருந்த பீடியைத் தூக்கி எறிந்தான். டேவிட்டுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. எதுவுமில்லை என்பதை உணர்த்திட உலக இலக்கியங்கள் எதனிலும் காணச் சாத்தியமற்ற காட்சியது.

கிளம்பிவிடு,கிளம்பிவிடு என எஸ்தர் சித்தியின் காதருகே வந்து வந்து சொல்லிப் போகிறது இருள் அப்பிய காற்று. அந்த கடும் இரவில் எல்லோருக்குமான கேப்பைக் கழியை எல்லோருக்கும் வழங்குகிறாள் எஸ்தர் சித்தி. அரை குறை வயிறோடு எல்லோரும் போகப் போகும் தொலைதூரம் ஏற்படுத்திய துக்கத்தைச் சுமந்தபடி தூங்கப் போனார்கள். விழிப்பிற்கும், தூக்கத்திற்கும் நடுவில் அசைந்தாடியது வீடு. இனி வரவே சாத்தியமற்ற வீட்டை வெறித்துப் பார்த்தபடி எஸ்தர் சித்தி பாட்டியின் அருகில் படுத்துக் கொண்டாள். அந்த வீட்டில் இருந்த ஒன்பது பேருக்கும் ஒன்பது யோசனைகள் ஓடிக்கொண்டேயிருக்கிறது. எஸ்தர் சித்தியின் மனதில் உழைத்துச் சலித்துப்போன ஈசாக்கின் முகமும் கண்ணீர் வழிந்திட வெறித்தபடி கிடக்கும் பாட்டியின் கண்களும் மாறி மாறி தோன்றியது. விடிந்து விட்டது. இரவே வந்து சேர்ந்திருந்த சவப்பெட்டி.யில் பாட்டியை நல்லடக்கம் செய்துவிட்டு எஸ்தர் சித்தி தன் குடும்பத்தையே ஏதாவது உழைத்துப் பிழைக்கலாம் என மதுரை நோக்கி அழைத்துப் போகிறாள்.

காலத்தைச் சிதைத்த பெரும் பஞ்சங்களின் கதையை பூடமாகத்தான் சொல்ல முடியும். அன்பும், கருணையும் நிறைந்த மனம் கொண்ட எஸ்தர் சித்தி பாட்டியை என்ன செய்தாள் என்பதை கதை எந்த சொல் கொண்டும் விளக்கவில்லை. ஆனாலும் கதையை வாசிக்கிறவர்கள் மட்டுமல்ல, கதைக்குள் வருகிறவர்களும்தான் புரிந்து கொண்டிருப்பார்கள். அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குக்கிராமம் ஒன்றில் தவித்தலையும் முதிய உயிரிகளை எண்ணெய்க் குளியல் செய்து நீத்தாருக்கும் சடங்கு இன்றுவரையிலும் இருந்து வருவது எஸ்தர் கதையை ஒருகதைத் தொடருக்காக வாசித்த போது நினைவிற்கு வந்தது… காலம் மகா அரக்கன். நல்லதும் கெட்டதுமாக எல்லாவற்றையும் தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறான் அவன்.
ம.மணிமாறன் ( தொடரும்)

,இந்த தொடரை முழுமையாக படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *