நூல் விமர்சனம்: பச்சை இலைகள் உதிர்க்கும் வெயில்!

கவிவாணனுடன் முப்பது ஆண்டு சிநேகிதம். காலம்தான் எவ்வளவு விரைவாகச் சென்றிருக்கிறது. நட்பை துவக்கிய காலத்தில் மாநாடுகளில் சந்தித்துக் கொள்வோம். மிகவும் உரிமையெடுத்து பேசுவார். இன்றும் அதே உரிமை தொடர்கிறது. அன்றெழுதிய சொற்களின் பசுமையை இன்றும் பழுப்பேறி விடாமல் பாதுகாத்து வருகிறார். எப்போதும் புத்தகங்களோடுதான் வலம் வருவார். வற்றாத சுனையாய் அவருக்குள் ஊறிக் கொண்டிருக்கும் கவியமுதை புத்தகங்களுக்குள் சேமித்துக் கொள்கிறார். எளிய வாழ்வு எளிய தோற்றம், ஆனால் யாவர்க்குமான பேரன்பு எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். கால நீட்சி அவரின் தோற்றத்தைக் கூட அப்படியே வைத்திருக்கிறது. சமீபத்திய அவரின் கவிதைத் தொகுப்பு பச்சை இலைகள் உதிர்க்கும் வெயில்.

கவிவாணன்

மூன்றாம் உலகப் போர் அறிவிக்கப்படாவிட்டாலும், ஆங்காங்கே சின்னஞ்சிறு நாடுகள் வல்லாதிக்க கழுகுகளால் குத்தி குதறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், எப்போதுமே யுத்தத்தில் எளிய மக்கள் குறிப்பாக பெண்கள் அதிலும் குழந்தைகள் படும் துயரம் சொல்லவொண்ணாதது. அந்த போரின் துயரக் காட்சிகளை விவரித்து விட்டு அதன் இறுதி வரிகளை இப்படி முடிக்கிறார் கவிஞர் மனதை பிசையும் வரிகள்.

குழந்தைக்கு
குண்டு மழை விழாத
நிலத்தை
விளையாடத்
தருவீர்களா?

அக்குள் வாசம் யாருக்குத்தான் பிடிக்கும். ஆனால் கவிஞருக்கு பிடித்திருக்கிறது. அம்மாவின் அக்குள் வாசம் ஒரு கவிஞனால் மட்டுமே இப்படியெல்லாம் யோசிக்க முடியும். கவிஞர் கனிமொழி எழுதிய அம்மாவின் வாசனையும், கருவறை வாசனையும் நினைவிற்கு வருகிறது. அம்மாவை நினைவுறுத்தும் ஏதொன்றும் அவ்வளவு எளிதில் மறந்து போகாது எனும் போது, அக்குள் வாசம் மட்டும் நினைவிலிருந்து நீங்கிவிடுமா என்ன?

பிரிதொரு நாளில்
அவள் எனக்கு உணவு
வைத்து நகர்ந்த போது
நான் வளர்ந்ததாய் சொன்னாள்
ஆயினும் நீள்கிறது
பேருணர்வின்
அக்குள் வாசனை

குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை, கேட்ட வார்த்தைகள் தான் பேசுகின்றன என்ற வசனம் நினைவிற்கு வந்தது இந்தக் கவிதையை வாசித்ததும். கிளிகள் வைத்து எத்தனையோ கவிதைகள் புதிது புதிதாய் வந்த போதும் இதுவும் புதிதாய்த்தான் இருக்கிறது.

பிறர்
சொல்வதை வேண்டுமானால்
சொல்லும் கிளிகள்
பிறர் சொல்லாத
ஒன்றையல்ல

தொகுப்பில் எனக்கு பிடித்த மிகவும் அருமையான கவிதையாக இதைத்தான் கூறலாம். வாழ்க்கையென்பது ஒருவரை ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்வது தானே, வாழ நினைத்த வாழ்க்கைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் இடைப்பட்டது தானே வாழ்க்கை. ஏக்கம் நிறைந்த எளியவர்களின் வாழ்க்கை இக்கவிதையில் உயிரோட்டமாய் திகழ்கிறது.

அது போன்ற ஒன்றை
இது போன்ற ஒன்றை என
ஒன்றை முன்னிருத்தியே
வாழ்க்கை போன்ற
ஒன்றை
வாழ்கிறோம்

தொகுப்பில் காதல் கவிதைகள் பெருமளவு இடம் பெற்றிருக்கிறது. ஐம்பது வயதை தாண்டிய பின்னரும் காதல் அவரை துயருருத்தியிருக்கிறது. அதன் நினைவுகளால் அலைவுறுகிறார். அவரது தீராத இளமைக்கு காதல் கூட ஒரு காரணமாக இருக்கலாம். வாசிப்பில் ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது. பச்சை இலைகள் உதிர்க்கும் வெயில் கவிதை நூல் வாழ்த்துகள் கவிவாணன்.
செ.தமிழ்ராஜ்

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *