
திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது என்று ஐயூஎம்எல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை ராயபுரத்தில் ஐயூஎம்எல் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து தவெக ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததோடு, ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகிறது. இன்றுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் நாம் தொடர்ந்து பயணிக்க இயலாது.
இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 22 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியில் 2 இடங்களில் வெற்றிபெற்றது. இத்தேர்தலில் முடிவில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து ஐயூஎம்எல் தவெகவுக்கு ஆதரவளித்தது. மேலும் தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து அந்த கட்சி விலகியுள்ளது.



