
நாளை நடைபெறும் நீட் தேர்வை முன்னிட்டு சேலத்தில் சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள எம்பிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த மே 3- ம் தேதியன்று நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு இந்தியா முழுவதும் நாளை (ஜூன் 21) நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதேபோல, கடந்த முறை நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்தது விசாரணையில் தெரியவந்ததால், தேர்வு முடியும் வரை அந்த செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.நாளை நடைபெறும் நீட் தேர்விற்கு சேலம் அரசு கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, சின்ன திருப்பதி ஜெயராம் பப்ளிக் பள்ளி, செவ்வாய்பேட்டை, அயோத்தியாபட்டினம், அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி மற்றும் கொண்டலாம்பட்டி பகுதிகளில் உள்ள பிரபல மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் என 20-க்கும் மேற்பட்ட நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மதியம் 2 மணி முதல்- 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒரு மணிக்குள், அந்தந்த மையங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சின்னசேலம்-சேலம் மற்றும் திருப்பத்தூர்-சேலம் இடையே நாளை (ஜூன் 21) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சின்னசேலத்தில் இருந்து நாளை காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 11.20 மணிக்கு சேலம் வந்தடையும். அதேபோல, திருப்பத்தூரில் இருந்து ஞாயிறு காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 10.45 மணிக்கு சேலம் வந்தடையும். இந்த சேவையை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



