பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 14… சூலமங்கலம் ராஜலட்சுமி

உலக இசைதினத்தை முன்னிட்டு யாரை எழுதலாம் என்ற நினைப்புடன் டியூப்பில் கவியரசர் கண்ணதாசனின் ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். காதல் பேசும் பைங்கிளி ஒருவள், தன் காதலைச் சொல்லும் போது காதல் வேண்டாம் என்ற துறவு மனநிலையில் உள்ளவன் அவள் காதலை மறுக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு பாடல் அது. எல்.ஆர்.ஈஸ்வரியின் அழகிய ஹம்மிங்கோடு துவங்கும் இந்த பாடலின் இசையும், பத்மஸ்ரீ டி.எம்.சௌந்தரராஜனின் குரலும் காதல் துன்பம் என்று கருதுபவர்களுக்கு அருமருந்தாகவே அமையும்.

இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும்…

என்று எல்.ஆர்.ஈஸ்வரி இப்படி பாடுவதற்கு சிரிப்போடு பதில் அளித்திருப்பார் டி.எம்.சௌந்தரராஜன். அத்துடன் நடிகர் ஏ.வி.எம்.ராஜன் குரலுக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றி டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருப்பார்.

இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்…

என்று பதில் சொல்லும் வகையில் அமையப் பெற்ற இந்த பாடலில், உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தாலென்ன, இது ஒட்டை வீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசையென்ன, பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கான்ல் நீரே, நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு என ஒரு பாடலுக்குள் எத்தனை தத்துவம் பொதிந்த அர்த்த செறிவை கவியரசர் கண்ணதாசன் வழங்கியுள்ளார். 1970-ம் ஆண்டு வி.டி.அரசு இயக்கத்தில் வெளியான தரிசனம் படத்தில் இடம் பெற்றது இந்த பாடல். இந்த தனித்துவமிக்க பாடலுக்கு இசையமைத்தவர் ஒரு பெண்.

தமிழ் திரைப்படம் உருவாகி நூற்றாண்டை கடந்த பின்னும் திரைக்குப் பின்னாலான பெண்களின் பங்களிப்பு குறைவு தான். 1936-ம் ஆண்டு மிஸ் கமலா திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையை டி.பி. ராஜலட்சுமி பெற்றார். அதற்குப் பின் பி.பானுமதி, சாவித்திரி போன்ற இயக்குநர்கள் உருவானார்கள். அதற்குப் பிறகு நீ….ண்ட இடைவெளி. அதற்குப் பின் ஷோபா சந்திரசேகர், பி.ஆர்.விஜயலட்சுமி, சுஹாசினி, ரேவதி, லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா கொங்கரா, காயத்திரி, ஹலீதா ஷமீம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், கிருத்திகா உதயநிதி, மதுமிதா, அனிதா உதீப் என்று பலர் இயக்குநர்களாக உருவெடுத்தனர்.ஆடை வடிவமைப்பு என்ற செக்சனில் நீண்ட காலமாக நடிகர்களின் மனைவிகளே மாஸ்டர்களாக உள்ளனர். இது தவிர பெரிதாக பெண் கலைஞர்கள் திரையில் மின்ன முடிவதில்லை.

திரைப்பட பாடலாசிரியராக 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த குடியிருந்த கோவில் படத்தில் ரோஷனாரா பேகம் எழுதிய குங்குமப்பொட்டின் மங்கலம் பாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாடலாசிரியர் தாமரைக்கு முன் சினிமாவில் பாடல் எழுதியவர் ரோஷனாரா பேகம் என்று வரலா றுதான் இன்னமும் எழுதப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையா? ஆனால், திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் மட்டுமின்றி மிகச்சிறந்த பாடலாசிரியராக திகழ்ந்த சூலமங்கலம் ஆர்.ராஜலட்சுமியின் பெயர் இன்றுவரை இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. தரிசனம் படத்தில் இடம் பெற்ற மாலைநேரத்து இயக்கம் பாடலுக்கு இசையமைத்தவர் இதே சூலமங்கலம் ராஜலட்சுமி தான். அந்த படத்தில் உதவி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை.ஆர்.கே.சேகர்.

தனது சகோதரி ஜெயலட்சுமியுடன் இணைந்தும், தனித்தும் டைகர் தாத்தாச்சாரி, பிள்ளையார், அப்போதே சொன்னேனே கேட்டியா உள்ளிட்ட சில படங்களுக்கு ராஜலட்சுமி இசையமைத்துள்ளார் என்பது வரலாறு. ஆனால், பெரிதாக அவர் பெயர் தமிழ் சினிமா உலகில் பேசப்படுவதில்லை. 1962-ம் ஆண்டு எம்.வி.ராமன் இயக்கத்தில் உருவான கொஞ்சம் சலங்கை படத்திற்கு இசையமைத்த எம்.எஸ்.சுப்பையா நாயுடுவிற்கு உதவியாளராக சூலமங்கலம் ராஜலட்சுமி இருந்துள்ளார். அத்துடன் இப்படத்தில் தனது கணீர் குரலில் ராமலிங்க அடிகளாரின் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் பாடலையும் பாடியுள்ளார்.

கர்நாடக இசைத்துறையில் ராதா- ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி- காயத்ரி, பிரியா சகோதரிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த சூலமங்கலம் சகோதரிகள் தஞ்சாவூர் அருகே உள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமத்தில் பிறந்தவர்கள். இவர்கள் கே. ஜி. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றவர்கள். சூலமங்கலம் சகோதரிகள் என்ற பெயருடைய இவர்களின் மூத்தவர் ஜெயலட்சுமி. இளையவர் ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் சிறுமிகளாக இருந்த போதே சூலமங்கலம் சகோதரிகள் என்று பிரபலமடைந்தனர்.

கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்ற இவர்கள் தமிழ்நாட்டில் பாடாத கோயில்கள் இல்லை. மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் பக்தி பாடல் இசைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர். 18-ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவரான தேவராய சுவாமிகள் இயற்றிய கந்தசஷ்டி கவசம் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று பாடப்பட்டதாகும். இந்த பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டது.

ஆனால், சூலமங்கலம் சகோதரிகள் பாடியது தான் புகழ் பெற்றது. தமிழ் பெண்களின் பூஜையறையில் இரண்டறக் கலந்துவிட்ட கந்த சஷ்டி கவசம் ரெக்கார்ட் விற்பனையில் பெரும் சாதனையைப் படைத்தது. மேலும் இவர்கள் பாடிய ஸ்ரீ கந்த குரு கவசம், அபிராமி அந்தாதி, திருப்புகழ், திருப்பாவை, திருவாசகம், சிவபுராணம் கந்தர் அநுபூதி. அபிராமி அந்தாதி பாடல்கள் பக்தியிசையின் அடையாளங்களாய் உள்ளன. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் இவர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர்.

சூலமங்கலம் சகோதரிகள் இணைந்து பாடிய ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பக்திப் பாடல், குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில், இசைத்தட்டாக முதலில் வெளிவந்தது. பிறகு, அது தான் அந்த பாடல் ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் இணைக்கப்பட்டது. சூலமங்கலம் ஜெயலட்சுமி போஜன், சக்ரதாரி, நாட்டிய ராணி உள்பட பல படங்களில் பாடல்கள் பாடினார். ஆனால், அவரது சகோதரி ஆர்.ராஜலட்சுமி கிருஷ்ண பக்தி, மங்கையர்க்கரசி, கொஞ்சும் சலங்கை, கர்ணன்,நாணல், கவுரி கல்யாணம், திருமால் பெருமை, படிக்காத மேதை, நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் பாடல்களைப் பாடினார். குறிப்பாக அவர் பாடிய ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா பாடல் அவருக்கு பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது.

இலங்கை வானொலியின் சேவை ஒவ்வொரு நாளும் சூலமங்கலம் ராஜலட்சுமியின் குரலில், குயில் கூவித் துயில் எழுப்ப பாடலோடு தான் புலர்ந்தது. வெள்ளைக் கமலத்திலேயே, திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும், காக்கைச் சிறகினிலே நந்தலாலா, போய் வா மகளே போய் வா, திருத்தணி முருகா தென்னவர் தலைவா, அருவி மகள் வளையோசை, மல்லிகை பூப்போட்டு கண்ணுக்கு, குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், ஆணி முத்து வாங்கி வந்தேன், வருவான்டி தருவான்டி மலையான்டி என அவர் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்கள் அனைவராலும் ரசிகப்பட்டன. இதற்குக் காரணம் இளமைத் துடிப்பு, மென்மையான இனிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன், துல்லியமான உச்சரிப்பு ஆகியவற்றால் அனைத்து விதமான பாடல்களுக்கும் அவரது குரல் கச்சிதமாக பொருந்தியது.

சூலமங்கலம் ராஜலட்சுமி

அவர் கே.வி.மகாதேவன், டி.ஜி.லிங்கப்பா, ஜி.ராமநாதன், நௌஷாத், லட்சுமணன் குருநாத், கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ்.ராஜேஸ்வரராவ், எச்.ஆர்.பத்மநாபசாஸ்திரி, சி.என்.பாண்டுரங்கன், ஜி.கே.வெங்கடேஷ், டி. ஏ.கல்யாணம், வி.குமார், டி. ஆர்.பாப்பா, எம்.எல். ஸ்ரீகாந்த், குன்னக்குடி வைத்தியநாதன், எஸ்.தட்சிணாமூர்த்தி, சித்தூர் வி. நாகையா, எம்.கே.ஆத்மநாதன்,சங்கர்-கணேஷ், ராஜன்-நாகேந்திரா, சகோதரர் லட்சுமணன், வி. தட்சிணாமூர்த்தி, பி.எஸ்.திவாகர், புகழேந்தி ஆகியோரின் இசையில் மட்டுமின்றி தன் சொந்த இசையிலும் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். 1950 காலக்கட்டங்களில் அவர் அதிக அளவில் பாடல்களைப் பாடினார். ஆனால், 1960 காலக்கட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் குரல்கள் தேவைப்படும் பாடல்களுக்கு மட்டுமே அவர் அழைக்கப்பட்டார்.

சூலமங்கலம் ராஜலட்சுமி டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.சி.கிருஷ்ணன், ஜே.பி.சந்திரபாபு, கே.ஆர்.ராமசாமி, எம்.பாலமுரளி கிருஷ்ணா, ஏ.எல்.ராகவன் மற்றும் கே.ஜே.யேசுதாஸ் ஆகியோருடன் இணைந்தும் பாடியுள்ளார். இருகுரல் இசையாக அவரது சகோதரி சூலமங்கலம் ஜெயலட்சுமி, பி.லீலா மற்றும் பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, ராதா ஜெயலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.வி.ரத்தினம், கே.ஜமுனா ராணி, எஸ்.ஜானகி, ஜிக்கி, பி.வசந்தா, ஏ.ஜி.ரத்னமாலா, எம்.ஆர்.விஜயா, சரளா உள்ளிட்ட பலருடன் ராஜலட்சுமி பாடியுள்ளார். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பெரும்பாலான பக்தி பாடல்களுக்கு ராஜலட்சுமி தான் இசை அமைத்துள்ளார். பாடல் எழுதும் சவாலான வேலையும் சேர்த்து அவர் செய்துள்ளார். சூலமங்கலம் சகோதரிகள் என்ற லேபிளில் உள்ள நூற்றுக்கணக்கான பாடல்களை ராஜலட்சுமி தான் பாடி இசையமைத்துள்ளார். ஆனால், இன்றைய பெண் கவிஞர்கள் பத்திரிகைகளின் பேட்டியின்போது கொடுக்கும் பட்டியலில் சூலமங்கலம் ராஜலட்சுமிக்கு இடமே கிடையாது. இன்று கவிதை நூல்கள் மூலம் திடீர் பாடலாசிரியர்களாகி விடும் சில பெண் கவிஞர்கள் பல பேருக்கு இலக்கணச் சுத்தமாக பாடல்கள் எழுதத் தெரியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், கர்நாடக இசையின் அடிப்படை கூறுகளுடன் சூலமங்கலம் ராஜலட்சுமி ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.

அப்படிக் கேட்க கேட்கத் திகட்டாத பாடல் ஒன்று உண்டு. நான் சிறுவயதில் சொர்க்கம் சலூனில் அன்றாடம் கேட்ட பாடல் இது.

மருதமலை ஆண்டவனே மருதமலை ஆண்டவனே
மருதமலை ஆண்டவனே மனம் குளிர பாடிட வந்தோமே
சிந்தனையை உன்னிடம் தந்து உந்தனையே எண்ணத்தில் கொண்டு
சிந்தனையை உன்னிடம் தந்து உந்தனையே எண்ணத்தில் கொண்டு
கந்தன் என்னும் சொல்லில் பிறந்து களித்திட வந்தோமய்யா…
கந்தன் என்னும் சொல்லில் பிறந்து களித்திட வந்தோமய்யா…

இருகுரலிசை என்று தெரியாத வகையில் பாடப்பட்ட இந்த பாடலில் ஈராறு கைகளிலே எத்தனையோ வரங்களுண்டு என்று புதுக்கவிதைக்குரிய வீச்சுடன் பக்தி மணம் கமழும். இந்த பாடலை எழுதியவர் சூலமங்கலம் ராஜலட்சுமி. இந்த பாடலுக்கும் அவர் தான் இசையமைத்தார். சூலமங்கலம் சகோதரிகள் பாடும் முருகன் பாடல்களின் வேகமும், தாளமும் ரசிக்க வைக்கும். இலங்கை கதிர்காமத்தில் உள்ள முருகனை வேண்டி அவர்கள் பாடிய ஒரு பாடல் கடல் கடந்து வாழும் தமிழர்களால் இன்றளவும் விரும்பிக் கேட்கப் படுகிறது.

செந்தில் கடலலை ஓசைகேட்டும் கதிர்காமத்தில்
கதிர்காம மணியோசை கேட்கும் செந்தூரில்….

ஆழ்கடலும் ஒன்று தான்
ஆண்டவனும் ஒன்று தான்
அங்கிருக்கும் திரைமறைவில்
இருப்பவனும் முருகன் தான்
திரைமறைவில் இருந்தாலும்
திருச்செந்தூரில் இருந்தாலும்
திருக்குமரன் கண்களுக்கு
தென்படுவான் எங்கிருந்தாலும்…

மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் இந்த பாடலின் மெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் சூலமங்கலம் ஆர்.ராஜலட்சுமி தான். யூடியூப்பில் சரிகம பக்தியில் 297,757 பேர் இந்த பாடலைக் கேட்டு ரசித்துள்ளனர். பக்தி பாடல்கள் என்பதைத் தாண்டி தெய்வீக நிலை கொண்டவர்களுக்கு மனங்களில் அசைந்தாடும் தெய்வங்களின் உருவங்களை தங்கள் குரல்கள் மூலம் உருவகப்படுத்துவதில் சூலமங்கலம் சகோதரிகள் பெரும் ஆளுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்த இசையறிவை ஒவ்வொரு பாடலிலும் வெளிப்பட்டது. ராஜலட்சுமி எழுதிய கருணை செய்வாயே கல்யாணியே பாடல் ஒரு இசைக்கச்சேரியைக் கேட்ட உணர்வை ஏற்படுத்தும். அவ்வளவு இசை நுணுக்கங்கள் கொண்ட பாடலிது.

இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கந்தனுக்கு பிடித்தது கன்னித்தமிழ் தான் பாடல் எனது பேவரைட்டுகளில் ஒன்று. ஆனால், சூலமங்கலம் ராஜலட்சுமி மக்கள் ஒற்றுமையை வலியுறுத்திய எழுதிய கந்தனுக்கு பிடித்தது பாடலுக்கு பெரும் ரசிகனாகி விட்டேன். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய

கந்தனுக்கு பிடித்தது
திருப்புகழ் தான்…
அந்த கண்ணனும்
விரும்பியது திருப்பாவை தான்
திருப்புகழ் மலர்ந்தது
திருவண்ணாமலையிலே
திருப்பாவை புலர்ந்தது
ஸ்ரீவில்லிபுத்தூரிலே…
ஸ்ரீவில்லிபுத்தூரிலே…

சைவ மதத்தில் பிறந்தவன் சரவணன் தானே
வைணவத்தில் தன்னுள் வைத்தான் கண்ணபிரானே
சைவம், வைணமும் ஒன்றென சொல்வதற்கு
சான்றாய் இணைந்தார்கள் அழகர்மலையிலே

மதங்களில் வேறுபாடுகள் இல்லை
மனித மனங்களில் ஆட்டிப் படைக்கும் பெருந்தொல்லை
இனிவரும் சந்ததிகள் ஏற்காது இந்த சொல்லை
எண்ணிப் பார்த்தால் அதிலே பேதம் எதுவுமில்லை…

குறமகளை மணந்தான் திருமுருகன்
இடைய குலத்திலே வளர்ந்தான் திருமாலும்
எம்மதமும் சம்மதமே என்றுதான் எடுத்துச் சொல்ல
இவ்விதமே வாழ்ந்திட வேண்டும் என்று மனதில் கொள்ள…

என்ற இந்த பாடலைக் கேட்டுப் பாருங்கள். என்னைப் போல நீங்களும் ரசிகர்களாகி விடுவீர்கள். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பல பாடல்களைப் பாடுவது சிரமம். அப்படியான வரிகளில் அமைக்கப்பட்ட பாடல்களில் பக்தியின் நோக்கம் சிறிது கூட குறையாது.

தக தகவென மயிலும் ஆடுது
தமிழினில் ஒரு சுவையும் கூடுது
சரவண பவ குக எனும் மந்திரத்தால்
புக புகவென குயிலும் கூவுது
மிக மிக காவடிகள் ஆடுது
தணிகை மலையில் ஆடிக்கிருத்திகையில்
ஓம் மந்திரம் சொன்னால்
முருகன் நான் என வருவான் முன்னால்…

என்ற இந்த பாடலின் வரிகளைக் கவனித்தால் கோயில் மணியோசை ஒலிப்பது போன்ற இசையோடு எழுதப்பட்டதை உணர முடியும். சூலமங்கலம் ராஜலட்சுமியின் எழுத்துக்கு இந்த பாடல் சான்று எனலாம். சூலமங்கலம் ராஜலட்சுமி தனித்துப் பாடிய பக்தி பாடல்களும் உண்டு.

திருநீறு தான் மலையானதோ- பழநியிலே
அந்த பழநியிலே
தங்கத்தேரு தான் குதித்தோடுதோ
மலையினிலே – அந்த மலையினிலே..

என்ற பாடல் தாலாட்டு கேட்பது போல அவ்வளவு சுகம். ராஜலட்சுமி எழுதி இசையமைத்தது இந்த பாடல். பக்தி பாடல்களில் சூலமங்கலம் சகோதரிகள் பல பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். டாக்டர் சிவா படத்தில் இடம் பெற்ற மலரே குறிஞ்சி மலரே பாடலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால், சூலமங்கலம் சகோதரிகள் பாடிய மலரே குறிஞ்சி மலரே பாடல் அவர்களின் பாட்டுப் பயணத்தில் புதிய முயற்சி என்றே சொல்லலாம்.

மலரே குறிஞ்சி மலரே…
பன்னிரு கையன் முருகன் கைகளில் அணைத்ததாலே
பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை தான் மலர்ந்திடுவாய்
பன்னிரு கையன் குமரன் பாதத்தில் சரணடைவாயோ

இந்த பாடல் எக்கோ பாணியில் வடிவமைக்கப்பட்டது. மலரே குறிஞ்சி மலரே என்பது மட்டுமின்றி பாடலின் இடையே மலர் மலரே என்ற சொல் அடிக்கடி எக்கோ பாணியில் எதிரொலிப்பது அவ்வளவு சிறப்பு. ஒரு பக்திப் பாடலுக்கு சூலமங்கலம் சகோதரிகள் இவ்வளவு மெனக்கெட்டுள்ளதை பாடலைக் கேட்கும் போது உணர முடியும். இந்த பாடலுக்கு இசையமைத்ததுடன் பாடலை எழுதியவர் சூலமங்கலம் ஆர்.ராஜலட்சுமி. ஒரு தரம் சரவண பவ என உரைத்திட, சித்திரை மாதத்தில் வசந்தம் வந்தது, ஊருக்கு ஒரு பெயர் கொண்டவனே, சண்டி ஸ்ரீ சண்டி, வயலூரில் குடி கொண்ட, சிவமணியால் வந்த, சரவணனின், வாரண மாமுகன், காசியிலே நீராடி, ஆயிரம் பேர் சொல்லி, ஆறுமுகம் கண்டு, செந்திலாண்டவன், குன்று வளர் உள்பட ஏராளமான பாடல்களை எழுதிய சூலமங்கலம் ஆர்.ராஜலட்சுமி 1990-ம் ஆண்டு சிதம்பரத்தில் கச்சேரியில் பங்கேற்ற போது நோய் வாய்ப்பட்டார். அதற்குப் பின் அவரால் சரியாக பாட முடியாமல் 1992-ம் ஆண்டு 51 வயதில் உயிரிழந்தார். இவரது மகன் தான் இசைஞானி இளையராஜா இசையில் கழுகு படத்தில் இடம் பெற்ற காதல் என்னும் கோவில். கட்டி வைத்தேன் நெஞ்சில் என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடிய சூலமங்கலம் முரளி.
ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *