மேகதாது அணை விவகாரம்: அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்படுவதாக அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி ஆளுநர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 19-ம் தேதி மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று ( ஜூன் 22) மீண்டும் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் முகம்மது பர்வேஷ் விதி எண் 110 – கீழ் விளக்கம் அளித்தார்.

அப்போது அமைச்சர் பேசுவதற்கு முன்பாக பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிறகு வாய்ப்பு தருகிறேன் என்று சபாநாயகர் கூறியதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் அமளிக்கு இடையே அமைச்சர் அரசு தரப்பு விளக்கத்தை அளித்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின் சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக அரசு விதிகளுக்குப் புறம்பாக, முதலமைச்சரின் பதிலுரையில் ஒரு திருத்தத்தை இடைச்செருகலாகத் தெரிவித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டமன்ற விதிகளின்படி ஒரு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால், அதற்கென அரசு தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும். கடந்த 18-06-2026 அன்றே அதுகுறித்த நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில், சட்டப்பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெற்று முதலமைச்சர் அந்த அரசு தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது விவாதமும் நடைபெற்றது.

ஆனால், விவாதம் முடிந்த பிறகு முதலமைச்சர் ஆற்றிய பதிலுரையில்தான், இந்த இடைச்செருகல் திருத்தத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். இது முற்றிலும் விதிகளுக்குப் புறம்பானது. விதமுறைகளின்படி அவர்கள் சட்டமன்றத்தில் இந்தத் திருத்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்சினை எழுப்பினோம். ஆனால், அதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்துள்ளது.

இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வு சார்ந்த விஷயம். காவிரி நதி என்பது தமிழகத்தின் ஜீவாதார நதி; தமிழகத்தின் ஜீவநதி. இதை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். காவிரி நதிநீரை நம்பித்தான் தமிழகத்தில் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் உள்ளது. ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் இதுகுறித்து ஒரு நிலையான இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டன. அப்படித் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்று இந்த அரசு கேட்பது எந்த நோக்கத்திற்காக? உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை 15 ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கீழ்ப்படுகை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலமான கர்நாடகா காவிரி நீரைத் தடுக்கவோ, தேக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, மீண்டும் இந்த இடைச்செருகல் திருத்தத் தீர்மானத்தை இந்த அரசு ஏன் கொண்டு வந்தது என்ற விளக்கத்தைப் பெறுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்னையைக் கொண்டு வந்தோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *