
திருவள்ளூரில் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்
திருவள்ளூர் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா கசிவு நேற்று ஏற்பட்டதில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ்காந்தி, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு பேர் நேற்று உயிரிழந்த நிலையில். இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், கே. சாமுவேல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். இதன் பின் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் அமோனியா கசிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கு தொழிற்சாலைக்கு உள்ளேயே தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டது தான் முக்கியமான காரணமாகும். 18 வயதிற்கு குறைவானவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசாங்கம் தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள 2 லட்சம் ரூபாய் இழப்பீடு மிகக் குறைவான தொகையாகும். இதனை தமிழ்நாடு அரசு அதிகரிக்க வேண்டும். மேலும் திருவள்ளூரில் அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு இந்த வழக்கை முறையாக நடத்த வேண்டும். சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் உயிர் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.



