தமிழ்நாட்டில் மின்வெட்டில் நம்பர் ஒன் தொகுதி பெரம்பூர்:உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டிலேயே மின்வெட்டில் நம்பர் ஒன் தொகுதியாக பெரம்பூர் தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 22) உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ” முதலமைச்சருக்கு திமுக எம்எல்ஏக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள். ஆளுநர் உரை நாளன்று தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும், முடிவில் தேசிய கீதம் ஒரு முறையும் பாடப்படும். ஆனால் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது ஏன் என்பது தான் எங்கள் கேள்வி. தமிழ்த்தாய் வாழ்த்தையும் இரண்டு முறை பாட சொல்லி ஆளுநரிடம் கேட்டிருக்கலாமே?

நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன்? நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். யூபிஎஸ்சி போன்ற தேர்வர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த யூபிஎஸ்சி தேர்வில் 60ல் 56 பேர் இத்திட்டத்தால் பயன்பெற்றவர்கள். இத்திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதலமைச்சர் விஜய் பதில் செல்ல வேண்டும்.

முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழ்நாட்டில் தன்னுடைய பெரம்பூர் தொகுதியையே நம்பர் ஒன் தொகுதியாக மாற்றி காட்டி இருக்கிறார். எதில் தெரியுமா? இன்று தமிழ்நாட்டிலேயே மின்வெட்டில் நம்பர் ஒன் தொகுதியாக பெரம்பூர் உள்ளது. ஆளும் கட்சிக்காரர்கள் என்ன பேசுகிறார்கள் தெரியுமா? ‘அண்ணன் பவருக்கு வந்தால் தமிழ்நாடு மாறும் என்று பார்த்தோம். ஆனால், அண்ணன் பவருக்கு வந்த நாளிலிருந்து தமிழ்நாட்டுக்கு பவர் போய்விட்டது’ என்று ஆளுங்கட்சிக்காரர்கள் பேசிக்கொண்டுள்ளனர். பவர் ஷேர் கொடுத்த ஆளுங்கட்சியால், அவர்கள் கட்சி அலுவலகத்துக்கே பவர் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட்டாகி விட்டதாம். அங்கு வந்தவர்கள் கூட பனையூரிலேயே பவர் இல்லை என்று புலம்பினார்கள் என்று தகவல் வந்து உள்ளது.

முன்பெல்லாம் புயல், மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் தவெக ஆட்சி அமைந்த பிறகுதான், முதல்முறையாக கரெண்ட் இல்லை என்று பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆரம்பித்து உள்ளார்கள். சென்னையில் ஜூன் 9-ம் தேதி நான்கு தனியார் பள்ளிகள், கரெண்ட் இல்லை என்று விடுமுறை விட்டுள்ளார்கள் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பினால் முதலமைச்சர் எதுவும் பேசுவதில்லை. ‘தீமையின் முன் மௌனமாக இருப்பதும், ஒரு வகையில் தீமைக்குத் துணை நிற்பதற்குச் சமம்’ என்ற பழமொழி இந்த அரசுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *