பக்தர்கள் ஷாக்… திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டணம் 5,000 ரூபாயாக உயர்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன கட்டணம் 5,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ள திருச்செந்தூர் கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இதனால் தினந்தோறும் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகின்றனர். இது தவிர திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக்கட்டணங்கள் மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தங்க ரத உலா திட்டத்திற்கு 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் உயர்த்தவும், அதற்கு நிரந்தர வைப்பு நிதியை ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து, ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சண்முக அர்ச்சனை, 5 ஆயிரம் ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூலவர் அபிஷேகத்திற்கு 1,500 ரூபாய் வாங்கியதற்கு, இரண்டு நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் 500 ரூபாயும், விழா நாட்களில் 2 ஆயிரமும் இருந்ததை, அனைத்து நாட்களிலும் 2,500 ரூபாய் என உயர்த்தப்பட உள்ளது. திருச்செந்தூர் கோயிலின் வருவாய் குறைந்துள்ளதால், இந்த கட்டண உயர்வை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் மக்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தால் வரும் 7-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *