
இந்த மாதம் முழுவதும் பாடல்களில் சொந்தக் கதை தான் போலும் ! நடுவில் ஒரு நாள் அம்மாவின் நினைவுநாள் வந்து போனது. எனக்கு ஓரளவிற்கேனும் இசை தெரிந்ததற்கு முழுமுதற்காரணம் அம்மா தான். எழுத்துப் பணியில் நான் வயலினை முற்றிலுமாக மறந்து விட்ட காலத்தில், “வயலினை விட்டுடாதடா“ என்று என் 42-வது வயதில் திரும்பவும், மாடசாமி மாஸ்டரிடம் என்னைக் கைபிடித்து இழுத்துச் சென்று வகுப்பில் சேர்த்துவிட்டவள் என்பதால், அம்மா என் நினைவுகளில் என்றும் இசை வடிவமாகத் தான் இருக்கிறாள்.
அம்மா நன்றாகப் பாடுவாள் என்று திரும்பவும் ஒரு முறை சொல்ல வேண்டியதில்லை. ஏரியாவில், நவராத்திரிகளில், ராதா கல்யாணங்களில், நாமசங்கீர்த்தனங்களில் அம்மா தியாகராஜர் கீர்த்தனை ஸ்பெஷலிஸ்ட்டாக அறியப்பட்டவள். என் சிறுவயதில், தொலைக்காட்சியும், கைபேசியும் இல்லாத அந்த நாட்களில் பாட்டு மட்டுமே ஒரே பொழுதுபோக்கு. யார் வீட்டிற்கு வந்தாலும் அம்மா பாடச் சொல்வாள். பள்ளியில் என்னோடு சந்திரசேகர் என்று ஒரு நண்பன் படித்தான். நன்றாகப் பாடுவான். சங்கராபரணம் பாடல்களைப் பாடி எல்லா அனைத்துப் பள்ளி போட்டிகளிலும் பரிசு வாங்குவான். சேதுபதி பள்ளியில் ஒரு ஆண்டுவிழாவிற்கு என்.ஆர்.என். சார் அவனுக்கு பஞ்சகச்சம், கோட், டர்பன் என்று சங்கர சாஸ்திரி மேக்கப் போட்டு, சங்கராபரணம் பாடலைப் பாட வைத்தது பள்ளியில் பல ஆண்டுகள் பேசப்பட்ட சம்பவம். கைபேசியில் கேமரா இல்லாத காலத்தில் பதிவு செய்ய முடியாமல் போன ஒரு அற்புதம் அது.
அவன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அம்மா பாடச் சொல்வாள். அவன் ஏனோ சங்கராபரணம் பாடாமல், “ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா பாடட்டுமா?“ என்று அதைப் பாடுவான். இன்னும் சற்று நெருங்கிப் பழகிய நண்பா்கள் “மாமி நீங்க பாடுங்க“ என்று பதில் வேண்டுகோள் வைப்பார்கள். என் இணைபிரியாத நண்பர்களில் ஒருவனான ரவியின் நேயர் விருப்பமாக அம்மா மாமவ சதா ஜனனி, கிருபயா பாலய, ரங்க புர விஹாரா, பாவயாமி ரகுராமம் என்று நிறையவே பாடியிருக்கிறாள். வீட்டுக்கு வந்து இப்படிப் பாடியவர்களில் எங்கள் எல்.ஐ.சி நண்பர் வின்சென்ட்டும் உண்டு. அவர் அப்போது ஆர்க்கெஸ்ட்ரா மேடைகளில் பாடிக் கொண்டிருந்தார். நல்ல பாடகர். ஆனால், அவரை பாட வைக்க எல்லோருமாக அரை மணி நேரம் கெஞ்ச வேண்டும். அப்படியும் நாம் கேட்பதைப் பாட மாட்டார். “அம்மா நீங்க பாடணும்.. தலைவரே நீங்க மொதல்ல பாடுங்க..“ என்று ஏக பந்தா செய்வார்.
அப்படியொரு நாள் அவர் வந்திருந்த போதுதான் அம்மா, “முந்தி மாதிரி நீ பாடவே மாட்டேங்கற வின்சென்ட் … கேளுங்கள் தரப்படும் பாடேன்,“ என்றாள். “அம்மா, நீங்க மொதல்ல பாடுங்க.. ராவ் பாடட்டும்.” என்றெல்லாம் வழக்கம் போல் அவர் பிகு செய்தார். நான் அவருக்காக பாடித் துதி மனமே .. பரனைக் கொண்டாடித் துதி தினமே… என்று படு கிளாசிக்கலாக மஹாராஜபுரம் சந்தானம் குரலில் பாடினேன். அவ்வை சண்முகியில் கமல் ருக்கு.. ருக்கு .. பாடும் போது, ஒரு மாமி “ஜெயதேவர் அஷ்டபதி மாதிரின்னா இருக்கு.” என்பாளே, அது போல் வின்சென்ட், “தலைவரே, இது எங்க பாட்டு மாதிரியே இல்லயே..” என்றார். கேட்ட பாட்டைப் பாடக் கூடாது என்ற தன் கொள்கையின் படி வின்சென்ட் “ஐயையா.. நான் வந்தேன் … தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்..“ பாட்டைப் பாடினார். பிறகு “அம்மா பாடணும்,“ என்றார். அம்மா, “நா பாடற பாட்டெல்லாம் ஒனக்கு தெரியாதேப்பா,“ என்றாள். வின்சென்ட் விடாமல், “அம்மா, நீங்க டெல்லில எல்லாம் இருந்திருக்கீங்க.. பழைய ஹிந்தி பாட்டு ஒண்ணு பாடுங்க.. கேப்போம்,“ என்றார். நான் திகைக்கும் விதமாக அம்மா சட்டென்று பாட ஆரம்பித்து விட்டாள்.
இக்கு பியார் கா நக்மா ஹே…
மோசோன்கி ரவானி ஹே…
ஜிந்தகி அவுர் குச் பீ நஹீ…
தேரி மேரி கஹானி ஹே…

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் டெல்லியிலிருந்து மதுரைக்கு வந்து விட்டோம். அம்மா இந்த பாட்டைப் பாடும் போது, நான் எல்.ஐ.சியில் வேலை பார்க்கிறேன்! நிஜமாகவே காலங்கள் உருண்டோடிய பின்னும் அம்மாவிற்கு எப்படி அந்தப் பாட்டு வரி பிசகாமல் நினைவில் இருந்தது என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அன்று அம்மா வெளிர் வான் நீலத்தில் காட்டன் புடவை கட்டியிருந்ததும், மேட்சிங் பிளவுஸ் பற்றிய கவலை இல்லாத அந்தக் காலகட்டத்தின் வழக்கத்திற்கேற்ப குட்டைக் கை வைத்த கறுப்பு பிளவுஸ் போட்டிருந்ததும் இன்றும் என் கண்முன் நிற்கிறது. அம்மா அன்று சோட்டி சி பாத் படத்தில் வரும் வித்யா சின்ஹா மாதிரி இருந்தாள். என்ன, நல்ல குண்டாக இருந்த வித்யா சின்ஹா ! அதன்பிறகு அம்மா அந்தப் பாட்டை நிறைய தடவை எங்களுக்குப் பாடிக் காட்டியிருக்கிறாள்.

அம்மாவின் நினைவும், கூடவே அம்மாவின் குரலில் இந்தப் பாடலும் மனதில் ஓடிக் கொண்டே இருக்க, இதை எழுதுவதற்கு முன் யூடிப்யூபில் இந்தப் பாட்டைக் கேட்டேன். சோர் என்று 1972-ல் வந்த படமாம். ஜெயபாதுரி இந்தப் பாட்டில் நல்ல அடர் நீலப் புடவையில் இருந்தது மற்றொரு ஆச்சரியம். இன்னொரு வியப்பான தகவல் இந்தப் படம் ஓசை என்ற பெயரில் மோகன், ராதிகா நடித்து 1984-ல் வந்திருக்கிறது. சங்கர் கணேஷ் இசையமைப்பு என்பதால், இக் பியார் கா நக்மா ஹே.. அப்படியே தமிழில் ஒரு பாடல் நான் கேட்டேன் என்று வாணி ஜெயராம், எஸ்.பி.பி குரலில் இருக்கிறது.

ஒரு பாடல் நான் கேட்டேன்…
உன் பாசம் அதில் பார்த்தேன்..
வாழ்க்கை என்று எதுவும் இல்லை…
உந்தன் எந்தன் கதை ஆகும்..
என் ஆயிரம் ஜென்மங்களும்
என் அன்பினை நான் கேட்பேன்..
வாழ்க்கை என்று எதுவும் இல்லை…
உந்தன் எந்தன் கதை ஆகும்….
வாலி ஒரிஜினல் இந்தி பாட்டின் அர்த்தத்தை வரிக்கு வரி அப்படியே கொண்டு வந்து விட, சங்கர் கணேஷ் ஒரிஜினல் மெட்டை அப்படியே ஒத்தி எடுத்து விட்டார்! அம்மா பியார் கா நக்மா பாடும் போதே இந்தப் பாடல் வந்துவிட்டது எங்கள் யாருக்குமே அப்போது தெரிந்திருக்கவில்லை.
இந்த யூடியூப் யுகத்தில் அம்மா இருந்திருந்தால், அம்மாவிற்கு இந்த தமிழ் பாட்டை போட்டுக் காட்டியிருக்கலாம் என்பதை நினைக்க துக்கமாக இருந்தது. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கேட்க வாய்ப்பே இல்லாத ஒரு பாடலை அம்மா அவ்வளவு ஞாபகமாகப் பாடியதன் காரணம் என்ன? ஜிந்தகி அவுர் குச் பீ நஹி.. தேரி மேரி கஹானி ஹே.. என்று துயரார்ந்த குரலில் அம்மா பாடியதற்குக் காரணமான அந்த கஹானி என்ன? என்று நான் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலேயே இருந்து விட்டது என் வாழ்வின் மகத்தான சோகம்!
– ச.சுப்பாராவ் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.




நிச்சயமா தாலாட்டிலிருந்தே உங்களுக்கு அம்மாவின் பாட்டு கிடைத்திருக்கும். அப்புறமென்ன உங்களுக்கு இசை ஞானம் வருவத்திற்கு. எல்லாபுகழும் அன்னைக்கே. 🙏
“சுக ராகம் சோகம் தானே” என்ற வரிகள் “பூங்காத்து திரும்புமா” (முதல் மரியாதை) பாடலில் வரும்.
சோக பாடல்கள் துக்கத்தின் விளைவாகத் தான் ஒருவருக்கு பிடிக்கவேண்டிய கட்டாயமில்லை…
அன்னக்கிளி உன்ன தேடுதே, மூக்குத்தி பூ மேலே போன்ற பல சோகபாடல்கள் அதே படத்தில் இடம் பெற்ற மகிழ்ச்சி பாடலைப் போலே புகழ் பெற்றவை. அந்த டியூனுக்கு மயங்கியதனால் ரசிக்கிறோமோ தவிர நாமும் அதே சோகத்தில் தவித்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதனால் தங்கள் தாயார் சோகத்தில் பாடியிருப்பாரோ என்று விசனப்பட வேண்டியதில்லை… 🙏🏿