தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து:தமிழக அரசு உத்தரவு

12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் டெண்டர் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளிலும் திடக்கழிவுகளை சேகரித்தல் மற்றும் அப்புறப்படுத்துதல் தொடர்பான விரிவான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தயாரிப்பதற்கும், அப்பணிகளுக்கான சேவைகளை வழங்கவும், தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் அரசு சார்பில் கோரப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பானது, தமிழக அரசின் திட்ட மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் ஜூன் 20-ம் தேதி விளம்பரமாக வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் இந்த முடிவைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, தூய்மை பணியினை தனியார் மயமாக்கக்கூடாது, தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் ஐநூறுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கு கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. அதேபோல், கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபாதை பணிகளுக்காக 35 டெண்டர்கள் விடப்பட்டிருந்தன. இந்த டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தற்போது 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *