
நொண்டிச் சிந்து
பெயர்க் காரணம்
நொண்டிச் சிந்து பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு நாட்டுப்புற நாடகப் பாடலாகும். களவுத் தொழிலில் ஈடுபட்ட ஒருவன் பிடிபட்டு, தண்டனையாக ஒரு கால் ஊனப்படுத்தப்பட்டுப் பின்னர் திருந்தி வருந்திக் கடவுளைத் தொழுது, இழந்த காலை மீண்டும் பெறுவதாக அமைந்த ஒரு கதையில் நாயகன் பாடும் பாடல்கள், அவன் நொண்டி என்பதால், நொண்டிச் சிந்து என்று பெயர் பெற்றது.
அமைப்பு
இது எண்சீர் கழிநெடிலடியில் அமைந்திருக்கும். நான்மை நடையில் வரும். ஓரடி இரண்டாக மடக்கி நான்கு நான்கு சீர்களாக எழுதப்படும். அவ்வாறுள்ள இரண்டடிகள் ஓரெதுகை பெற்றுவரும். முதல் அரையடியிலுள்ள நான்காம் சீர் தனிச்சொல்லாக வரும். தனிச்சொல் பெரும்பாலும் மூவசைகளுக்கு மிகாமல் வரும். ஓரடியின் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரவேண்டும். ஐந்தாம் சீரிலும் ஏழாம் சீரிலும் எதுகை அமைதல் சிறப்பு. மூன்றாம் சீரிலும் எட்டாம் சீரிலும் இயைபு கண்டிப்பாக அமைய வேண்டும்.
(உ-ம்)
இந்துத் துவமதுவே- நாட்டினில்
எளியவர் வாழ்வினை அழிக்கிறதே!
சிந்திடும் வியர்வையிலே- வாழ்கிற
சிறுபான் மையினரை வெறுக்கிறதே!
பாரினில் மதவெறியை- விதைக்கும்
பாசிஸ கொள்கையைப் பூசிக்குதே!
ஆரிய மேன்மையினை- நிரந்தரம்
ஆக்கிடப் பன்முகம் தாக்கிடுதே!
கோசலை மைந்தனுக்கு- பெரிய
கோவிலைக் கட்டுது காவியது
தேசமும் அழிந்திடவே- மதவெறி
தூண்டி வளர்த்திட வேண்டியிங்கே!
வள்ளுவர் ஆடையினை- காவியில்
வைக்கிறார் உண்மையை நைக்கிறவர்
எள்ளுவ தன்றியெதும்- செய்திட
இயலுமோ இச்சிறு செயலையெண்ணி!
வேஷமும் போடுகிறார்- காவி
வேஷ்டிகள் கட்டிய கோஷ்டியினர்
பாசமும் பசுவின்மேல்- வைத்துப்
பசுதின் போர்தமை நசுக்குகிறார்
சாதிச் சழக்குகளை- மேலும்
தழைத்திடச் செய்துதான் பிழைக்கின்றார்
ஆதிச் சரக்குகளை- புதிதாய்
அள்ளித் தெளித்துத் துள்ளுகிறார்
கற்பனை யில்மட்டுமே- இருக்கும்
கடவுளின் பேரால் தொடமறுத்து
அற்பரும் நடத்துகிறார்- நாட்டில்
அடிநிலை மனிதரை அடிமைகளாய்
‘ஜெய்ஸ்ரீ ராம்’எனவே- யாரையும்
செப்பிடச் சொல்லியே மப்புசெய்வார்
தெய்வங்கள் இல்லையென்ற- உண்மைச்
செய்திசொல் வோர்தமைக் கைதுசெய்வார்
இளந்தலை முறையினரே!- சீறிப்
பாய்வீர் மதவெறி மாய்த்திடவே!
உளந்தனில் சகிப்பினையே!- வளர்த்து
உலகினில் வாழ்வீர் கலகமின்றி!
-மனோந்திரா
ஏற்றப்பாட்டு
கிணற்றில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைக்கும் போது களைப்புத் தெரியாமல் இருக்கவும் ஒரே சீராக ஏற்றம் இறைக்கவும் பாடப்படும் ஒரு நாட்டுப்புறப் பாடல் ஏற்றப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது.பாட்டின் தாள லயத்திற்கு ஏற்ப ஏற்றத்தை மிதிப்பவர்கள் தங்கள் கால்களை மாற்றி மாற்றி வைத்து வேலை செய்வார்கள். இது வேலை செய்யும் வேகத்தை சீராக்குகிறது. பொதுவாக ஏற்றம் மிதிக்கும் போது இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து பாடுவார்கள். ஒருவர் பாடியதை மற்றவர் திரும்பப் பாடுவது அல்லது எதிரெதிர் அடிகள் பாடுவது வழக்கம்
ஏற்றப்பாட்டு பெரும்பாலும் ஆண்களே பாடுகின்றனர். கிணற்றில் ஏறி நீர் இறைப்பது ஆண்கள் என்பதால் இவ்வழக்கம் இருந்திருக்கலாம்.
(உ.ம்)
ஆதி பெரியோனே ஆண்டவனே காவல்;
ஆபத்து வராமல் அடியேனைக் காரும்;
ரெண்டுடனே வாரீர்; மூணுடனே வாரீர்;
நாலுடனே வாரீர்; அஞ்சுடனே வாரீர்;
ஆறுடனே வாரீர்; ஏழுடனே வாரீர்;
எட்டுடனே வாரீர்…
எட்டாத் தலைக்கு வற்றாத கடலோ?
ஓடி வா என் கண்ணே, ஒருபதியால் ஒண்ணு,
ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் மூணு,
ஒருபதியால் நாலு, ஒருபதியால் அஞ்சு,
ஒருபதியால் ஆறு, ஒருபதியால் ஏழு,
ஒருபதியால் எட்டு…
ஒருவன்தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வோன்
இருள்தன்னை வீசி, இருபதியால் ரெண்டு,
இருபதியால் மூணு, இருபதியால் நாலு,
இருபதியால் அஞ்சு, இருபதியால் ஆறு,
இருபதியால் ஏழு, இருபதியால் எட்டு
பழைய திரைப்படப் பாடல் ஒன்று ஏற்றம் இறைப்பவர்களால் பாடப்படுவது போல் அமைந்திருக்கும். அது:
ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலேயிருக்குது முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா –
இது இன்பம் விளையும் தோட்டம்
கிணற்று நீரை நிலத்துக்குத் தான்
எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு
உயர்வளிக்கும் ஊட்டம்
எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர்பார்த்து பொழைக்கணும் -நம்ம
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்
உடும்பு போல உறுதிவேணும்
ஓணான் நிலைமை திருந்தணும்
ஒடஞ்சிபோன நமது இனம்
ஒண்ணாவந்து பொருந்தணும்
ஓதுவார் தொழுவாரெல்லாம்
உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம்
ஏர் நடக்கும் நடையிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை
அலசிப் பாத்தா மனசிலே
நீதியென்ற நெல்விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே
விதியைஎண்ணி விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறணும்
வேலைசெஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறணும்
நீதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்புசேரணும்
நிரந்தரமா சகலருமே
சொதந்திரமா வாழணும்!
-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஏசல் பாட்டு
இகழ்வதுபோல் இகழ்ந்து புகழ்ந்து பாடும் பாட்டு ஏசல் பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இலக்குமியும் பார்வதியும் சண்டை போடுவதுபோல் சிவனையும் பெருமாளையும் புகழ்ந்து பாடும் பாட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடுவாசல் கிடையாமல் சுடுகாட்டிலே
வீற்றிருந்தார் அல்லரோடி. உங்கள் சிவனார்
நாடுதேசம் வீடுவாசல் காடுகள் விட்டே
நடுக்கடலிற் பள்ளிகொண்டார் உங்கள் பெருமாள்.
அண்டையிலே மண்ணெடுத்துக் கூலியாளாகி
அமர்ந்தசொக்க நா தரடி, உங்கள் சிவனார் !
சண்டையில அர்ச்சுனர்க்குக் கூலியாளாகிச்
சாரதீயஞ் செய்தாரடி உங்கள் பெருமாள்.
வேண்டுமென்றே சோறுகறி மிக்கவிருக்க
விடத்தைக் குடித்தாரோடி உங்கள் சிவனார் !
மாண்டுபோக வெண்ணெய்தயிர் தாழியிருக்க
மண்ணைவாரித் தின்றாரோடி உங்கள் பெருமாள்.
-இலக்குமி பார்வதி ஏசல்
இப்பாடலில் எதுகையும் மோனையும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.
தெம்மாங்கு பாட்டு
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் வகைகளில் ஒன்றாகும். தேனின் இனிமை போன்று கேட்பதற்கு மிகவும் இதமாக இருப்பதால் ‘தேன் பாங்கு’ என்றாகி, பின்னர் அது மருவி ‘தெம்மாங்கு’ என அழைக்கப்படுகிறது. இது உழைக்கும் மக்களின் களைப்பைப் போக்க உதவும் கிராமியப் பாடலாகும்.
(உ-ம்)
1)முதல் இரண்டடிகள் எதுகையாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகள் மோனையாலும் இணைந்திருக்கும் பாடல்:
கார்முகிலைத் தான்கிழித்து கண்கவரும் வெண்ணிலவு
ஊர்ந்துவரும் பேரழகைப் பாராய்!- அது
ஒளிதன்னைக் கொட்டுதுபார்! ஆறாய்
தண்ணொளியைச் சிந்துகின்ற சந்திரனின் செய்கையினால்
கண்குளிரக் காசினியைத் தானே- கண்டு
களிக்கின்றேன் காலமெல்லாம் நானே!
சந்திரனில் கால்பதித்து சாத்திரத்தைப் பொய்ப்பித்தான்
முந்தியொரு மானிடனும் சீராய்- இன்னும்
மூடரதை ஏற்கவில்லை பாராய்!
வண்ணநிலா வான்வெளியில் வந்துபோகும் பேரழகைக்
கண்குளிரப் பார்த்துரசிப் போமே!- நிலவில்
கானமொன்று பாடிமகிழ் வோமே!
பாரபட்சம் ஏதுமின்றிப் பார்முழுக்கப் பாய்ச்சிடுமே
ஈரஒளி தன்னைநிலா என்றும்- அந்த
இன்பநிலை கிட்டிடுமே இன்றும்
தங்கமாவில் தட்டிவைத்த சப்பாத்தி போலவன்றோ
தொங்குதிந்தத் தங்கநிலா வானில்- அதைத்
தொட்டுக்கொண்டு தின்னவேண்டும் தேனில்
கால்களின்றிக் கைகளின்றித் தேருமின்றி ஊர்ந்துவரும்
பால்நிலவைப் பார்த்திருப்போர் தம்மை- என்றும்
பரவசமே பற்றிக்கொள்ளும் உண்மை
ஓர்சிறகும் இன்றியது ஓடிவரும் வான்வெளியில்
கார்முகிலை தான்கிழித்துத் தானே!- அது
காண்பவர்தம் கண்களுக்குத் தேனே!
-மனோந்திரா
2)முதல் இரண்டடிகள் மோனையாலும் இரண்டாவது அடியும் மூன்றாவது அடியும் எதுகையாலும் இணைக்கப்பட்ட பாடல்:
இந்தியினைத் தான்திணிக்க ஈனரவர் எண்ணுகிறார்
ஏனின்னும் தூங்குகிறீர் தம்பிமார்களே!- தூக்கம்
தானின்னும் போகலையோ தங்கைமார்களே!
தாய்மொழியாம் தங்கத்தமிழ் சாவதைத்தான் பார்த்திடவோ
சத்தமின்றித் தூங்குகிறீர் தம்பிமார்களே!- எழுவீர்!
யுத்தமொன்று வந்திருக்கு தங்கைமார்களே!
கல்விபாரம் கூடிடவே கட்டாயமாய் இந்தியினைக்
கற்கும்படி சொல்லுகிறார் தம்பிமார்களே!- அதைக்
கற்பதனால் என்னபயன் தங்கைமார்களே!
முச்சங்கம் தான்வளர்த்த மூத்தமொழி நம்தமிழை
மூளியாக்க எண்ணுகிறார் தம்பிமார்களே!- அதைக்
காளியாகி வீழ்த்திடுங்கள் தங்கைமார்களே!
குறளுண்டு வண்டமிழில் கம்பனது பாட்டுண்டு
கோவலன்க தையுமுண்டு தம்பிமார்களே!- தமிழ்க்
காவலராய் நின்றிடுவீர் தங்கைமார்களே!
செம்மொழியாம் நம்மொழியை நேற்றுவந்த இந்திமொழி
தின்றிடத்தான் பார்க்கிறது தம்பிமார்களே!- அது
தின்பதைத்த டுத்திடுவீர் தங்கைமார்களே!
-மனோந்திரா
மீதமுள்ள சிந்து வகைகளை அடுத்தவாரம் பார்ப்போம்.
-மனோந்திரா (தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



