
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாகபொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்துத்துவ மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில், வெறும் 47 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த இரகசியமே.
இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை கூட்டணி என்று பிரகடனம் செய்யப்பட்டதெல்லாம் பொருளற்றதாக ஆக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில், மதிமுக இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்கிறது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் வெளியேறிய நிலையில் தற்போது மதிமுகவும் விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



