பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 15…வி.பரசுராமன்

தோழர் தமிழ்ராஜ் எழுதிய நூல் விமர்சனம் குறித்த கட்டுரையைத் திருத்திக் கொண்டிருந்தேன். அதிகாலையில் எங்கிருந்தோ ஒரு பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வந்தன.

நான் உனை
நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே…

இசை அரக்கன் இளையராஜா, எஸ்.ஜானகி குரல்களில் கசிந்து வந்த அந்த பாடல் அப்படியே என்னை ஆட்கொண்டு விட்டது. இளையராஜா குரலில் காதல் பாடல்களைக் கேட்பதில் மிகப்பெரிய வெறியன் நான். தட்டச்சு செய்வதை நிறுத்தி விட்டு பாடலை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். இசைஞானியின் குரல் நடத்தும் மேஜிக்கை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியாது. அவர் குரல் விதவிதமான உணர்வுகளை ஏற்படுத்தும். கேட்போரை ஆட்கொள்ளும்.. உதாரணத்திற்கு

சிவ ஷக்திய யுதோ யது பவதி ..
சத்தியப் பிரபிவிதும் ..ம்..ம்..ம்.
நசே தேவம் தேவோனகளு…
குசலஹச்பந் திதுமபீ .ஆ….ஆ
அதஸ்த்மாம்.. ..ஆராத்யாம் ….
ஹரிஹர விரிஞ்சாதி பிறவி …
ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி..ஆ…ஆ

ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரி என்ற புகழ்பெற்ற நூலின் முதல் பாடலின் வரிகளின் வழியே நம்மை கைபிடித்து அழைத்துச் செல்லும் இளையராஜா,

ஜனனி, ஜனனி ஜகம் நீ.. அகம் நீ.
ஜனனி, ஜனனி ஜகம் நீ.. அகம் நீ.
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி… நீ பரிபூரணி… நீ
ஜனனி ,ஜனனி ஜகம் நீ.. அகம் நீ.
ஜனனி, ஜனனி ஜகம் நீ.. அகம் நீ.

என பாடும் போது அப்படியே கரைந்து விடுவோம். அது தான் இளையராஜா குரலில் உள்ள மேஜிக். உலக நாடுகள் முழுவதும் இளையராஜா நடத்தும் கச்சேரிகளில் (Concert) ஆடியன்ஸ் விரும்பிக் கேட்கும் பாடலிது. தாய் மூகாம்பிகை படத்தில் இடம் பெற்ற ஜனனி ஜனனி பாடலை இளையராஜா பாடிய பின்பு எழும் கரவோசை சுனாமி அலை கரை கடந்து வந்து விட்டுப் போகும் அதிர்வை ஏற்படுத்தும். இப்படி பக்தி பாடல் வழியே நம்மை இழுத்துச் செல்லும் ராஜாவின் குரல், காதல் பாடல்களின் வழியே நமக்கு சிறகுகளைத் தந்து விடுவது பெரும் அதிசயம்.

நேற்றைய பொழுதும் அப்படித்தான் இருந்தது. பகல் நிலவு படத்தில் இடம் பெற்ற பூமாலை தோள் சேரவா என்ற முதல் பாடல் ஒலிக்க ஆரம்பித்த பின்பு என்ன பாடல் அடுத்து ஒலிக்கும் என்ற நினைப்பை உருவாக்கி விட்டது. வள்ளி வள்ளி என வந்தான், அந்த உச்சிமலை காத்துக்கேளு, நான் தேடும் செவ்வந்திப்பூவிது, சின்னப்பொண்ணு சேல, வீட்டுக்கு வீடு வாசப்படி, காதல் ஓவியம் பாடும் காவியம், குடகுமலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா என தொடர்ந்த பாடல்கள் நேற்றைய அதிகாலையை அழகாக்கின. இசைவழியே பயணம் செய்பவர்களுக்கு சோர்வென்பது இருக்காது என்பது நானறிந்த பாடம்.

இன்றைய காலக்கட்டத்தில் விரும்பிய பாடல்களை கையடக்க செல்போன்களின் வழியே உடனடியாக கேட்டு விடலாம். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை அப்படியில்லை. வானொலி பெட்டி வேண்டும். பிப்ரவரி 14 காதலர்கள் தினம் என உலகம் முழுவதும் அறிந்த சமூகம், பிப்ரவரி 13 வானொலி தினம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.2011-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. ஆனால், 1975-ம் ஆண்டுகளிலேயே எங்கள் வீட்டின் ஒரு அங்கத்தினராக வானொலி இருந்தது. பூவும் பொட்டும், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், இசைச்சித்திரம், வானொலி மலர்,ஒலி மஞ்சரி,கவிதைச்செண்டு ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கிய ராஜேஸ்வரி சண்முகத்தின் தேன் தடவிய குரல்களைக் கெட்டு வளர்ந்தவன் நான்.

ஒவ்வொரு அதிகாலையும் அனைத்து மதப்பாடல்களும் அப்போது ஒலிபரப்பு செய்யப்பட்டன. அப்படிக்கேட்ட சில பாடல்களை நான் படித்த ஆர்.சி.பள்ளியில் கேட்டிருக்கிறேன். துவக்க கல்வி காலத்தில் ஒரு வகுப்பறையில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கட்டி இழுத்த ஆசிரியர்கள் தெய்வங்கள். அந்த தெய்வங்களில் எனக்குப் பிடித்த தெய்வம் ரோஸி மிஸ். மிக அற்புதமாக பாடுவார். பிடித்தமானவர்களின் கால்களை உரசும் பூனைக்குட்டி என அவர் காலடியில் தான் எனது இசை உணர்வு அரும்பியது என்றே சொல்வேன்.

அன்னை நீ எனக்கொரு வரம் அருள்வாய்
ஆரோக்கிய மாதாவே அருள் புரிவாய்
தன்னையே தந்தவளுக்குத் தாய் அல்லவா-
இந்த தாரணியைக் காப்பவன் நீ அல்லவா…

என அவர் பாடப்பாட அவர் முகம், அப்படியே மாதா சொரூபம் போல எனக்குக் காட்சியளிக்கும். லூர்தன்னை திருத்தலத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் போது மேய்ப்பனைத் தொடரும் ஆட்டுக்குட்டிகளாகி விடுவோம். அவர் பாடும் அன்னை நீ எனக்கொரு வரம் அருள்வாய் பாடலை மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால், எந்த பிகுவும் செய்யமாட்டார். கண்களை மூடி பாட ஆரம்பித்து விடுவார்.

கல்லும் கசிந்துருக முள் முடி தாங்கியே
கருணை வடிவம் யேசு மகன் அல்லவா…
பொல் உலகில் பாவ சுமைதனை சிலுவையாய்
தோளில் சுமந்தரவர்க்கு தாய் அல்லவா

என அவர் பாடுவதையே ரசித்துக் கொண்டிருப்போம். நானும் பாடவா எனக்கேட்டால் பாடுடா என்பார். வரிகளை மறந்து விட்டு விழிக்கும் போது கைதட்டிச் சிரிப்பார். மகிழ்ச்சியில் அவர் கண்களில் மிளிரும் அந்த கண்ணீர் துளிகளின் வழியே நான் கற்றுக் கொண்ட பாடல் வரிகள் ஏராளம். வாணி ஜெயராம் பாடிய அன்னை நீ எனக்கொரு வரம் அருள்வாய் பாடலை யூடியூப்பில் கேட்கும் போதெல்லாம் ரோஸி மிஸ் கண்களுக்கு முன் வந்து விடுகிறார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளியில் நான் கேட்ட இந்த பாடலை எழுதியவர் யார் என்பது தெரியாது. இத்தனை ஆண்டுகளான பின்னும் வரிகளும், அந்த இசையையும் மறக்கவில்லை.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தனது வகுப்பறைக் குழந்தைகள் மேடை ஏற வேண்டும் என்ற ஆவலில் ரோஸி மிஸ் சொல்லித் தந்த எத்தனையோ பாடல்களுடன் லூர்தன்னை திருத்தல மேடைகளில் ஏறி பாடியுள்ளோம். ஆடியுள்ளோம். நாடகங்களில் நடித்துள்ளோம். அவர் பாடல் சொல்லித் தரும் பாணியும், பாடம் சொல்லித்தரும் பாணியும் ஒன்று தான். நான், வின்சென்ட், சந்தானபாரதி, ராஜா, லாசர், பிஆர்பிவி கண்ணன் ஆகியோரை மேடை ஏற்றுவதற்கு அவர் எடுக்கும் முயற்சியும், பாடல் பாடி முடிக்கும் வரை இருக்கும் வரை பதற்றமும் பலமுறை பார்த்திருக்கிறேன். எங்கள் மிஸ், வாணி ஜெயராம் ரசிகை. மதிய வேளையில் சத்தமில்லாமல் அவர் முணுமுணுக்கும் பாடல்கள் பெரும்பாலும் வாணி ஜெயராம் பாடியவை தான். அவர் அடிக்கடி முணுமுணுக்கும் ஒரு பாடல்,

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

அவர் குரலில் இருந்த சோகம் நிறைந்த மென்மை தன்மை தான், வாணி ஜெயராம் ரசிகனாக என்னை மாற்றியது என்று நினைக்கிறேன். அவர் எங்களுக்குச் சொல்லித் தரும் பாடல்களும் வாணி ஜெயராம் பாடிய பாடல்களாகவே இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே…

மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா – எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா – …
நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே

வேளைநகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே – …
தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே
கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே

அவர் சொல்லித் தந்த பாடல் வரிகளை மறக்காமல், குழுவாக மேடை ஏறி பாடி பரிசு பெற்றிருக்கிறோம். அன்னை நீ எனக்கொரு வரம் அருள்வாய் என்ற பாடலையும், வணக்கம் வணக்கம் வணக்கமம்மா ஆகிய இரண்டு பாடல்களையும் எழுதியவர் வி.பரசுராமன். இவர் எழுதிய பாடல்கள் அத்தனையும் இனிமை மிகுந்தவை.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தை வேளைநகர் என்று தனது பாடல்களில் வி.பரசுராமன் குறிப்பிடுகிறார்.

இவர் எழுதிய பாடல்களை பிரபலமாக இருந்த பாடகர்கள்,பாடகிகள் பாடியுள்ளனர். வேளாங்கண்ணி வீணை என்ற பெயரில் வெளியான இவரது பாடல்களுக்கு எம்.லூயிஸ், கே.எஸ்.சேதுபதி ஆகியோர் இசையமைத்துள்ளனர். 1984-ம் ஆண்டு திருச்செங்கோடு மாரிமுத்து இயக்கத்தில் வெளியான மன்மதா என்னைத் தேடிவா படத்தில் டி.ராஜேந்தர் பாணியில் இசையமைத்தவர் கே.எஸ்.சேதுபதி, இஸ்லாமிய பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

எம்.லூயிஸ், கே.எஸ்.சேதுபதி இசையில் உருவான வேளாங்கண்ணி வீணை இசைத்தட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்பதை அதில் இடம் பெற்ற பாடல்களை வைத்தே உணர்ந்து கொள்ள முடியும்.

கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை –
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

இந்த பாடலை சிறுவயதில் நீங்கள் கேட்டிருக்கலாம். மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் இணைந்து பாடியது. அற்புதமான மெட்டமைக்கப்பட்ட இந்த பாடல், இலங்கை வானொலியில் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். இந்த பாடலை எழுதியவரும் வி.பரசுராமன் தான். எஸ்.ஜானகி பாடிய கிருஷ்ணர் பாடல்கள் புகழ்பெற்றவை. அவர் கிறிஸ்தவ பாடல்களையும் பாடியுள்ளார். அவர் பாடிய.

உலகெல்லாம் போற்றும் வேளாங்கண்ணி…
நிலமதில் நின்னடி நிலைபெற்று வேளைநகர்

வானளாவும் எழில் கோபுர வாசல்கள்
பல்வினைத் தீர்த்திடும் திருமணி ஓசைகள்…
கானம் பாடும் நீல கடலின் ஏழிசை
தாளம் போடும் அலைகளின் சீரிசை

பாடல், வேளாங்கண்ணி திருத்தலத்தின் பெருமையைச் சொல்லக்கூடியது. இடைவிடாத அலைகளின் முயற்சியை சீரிசை என்ற ஒரு வரியில் அடக்கியிருப்பார் பாடலாசிரியர் வி.பரசுராமன், எத்தனை கோடி பாடல்களாலும் உன் எழிலைச் சொல்ல முடியாது என்று எஸ்.ஜானகி பாடிய பக்திப் பாடலையும் எழுதியுள்ளார். டேப் ராதா மாணிக்கம் போல தனது தனித்த குரலால் கிறிஸ்தவ மக்களிடம் நன்கு அறிமுகமானவர் ஏ.வி.கோவிந்தன். எஸ்.சி.கிருஷ்ணனின் குரலில் இருக்கும் கணீர் தன்மை அவர் குரலில் இருக்கும். வேளாங்கண்ணி மாதாவை போற்ற அவர் பாடிய பாடல் பிரபலமானது. அதிர வைக்கும் தொகையறாவுடன் தான் கோவிந்தன் பாட ஆரம்பித்தார்.

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்
உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா
திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா…

என்ற தொகையறாவிற்குப் பின்

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா…
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா

என்று நடுங்கும் குரலில் பாடுவார். பக்தி இசை உலகில் முகம் தெரியாமல் போன எத்தனையோ கலைஞர்களைத் தேடும் பயணத்தில் ஏ.வி.கோவிந்தன் மிக முக்கியமானவராகத் தெரிகிறார். அவர் மொழி உச்சரிப்பும், பாடலும் லாவகமும் அவரைத் தேடும் பயணத்தை இந்த பாடல் மூலம் தந்திருக்கிறது. ஏ.வி.கோவிந்தன் பாடிய இந்த பாடலுக்கும் வி.பரசுராமன் தான் சொந்தக்காரர்.

கிறிஸ்தவ பாடல்களை அதிகம் பாடிய பாடகி என்றால் ஜிக்கி மற்றும் பி.சுசீலாவை சொல்லலாம். ஜிக்கி புகழ்பெற்ற எத்தனையோ கிறிஸ்தவ தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்படங்களில் பல புகழ்பெற்ற கிறிஸ்தவ பாடல்களை பி.சுசீலா பாடியுள்ளார். அவர் பாடிய இடைவிடா சகாய மாதா, அலைகடலின் ஓசையிலே, அம்மா தேவனின் தாயே, கத்தும் அலைகடல் ஓரத்திலே, மண்ணில் காலடி வைத்ததும், மாதா நீயே அருள் வெள்ளமே, ஆரோக்கிய தாயே ஆதாரம் நீயே, மாதா அருள் நிறைந்த மாதா, அன்னை மேரி திருவருள் ஆகிய பாடல்கள் தேவாலயங்களில் காலை, மாலை பிராத்தனைக்குப் பிறகு ஒலிபரப்பு செய்ய கேட்டிருக்கிறேன். கொலம்பியா ரெக்கார்டிங் கம்பெனி பி.சுசீலா படிய கிறிஸ்தவ கீர்த்தனைகள் அடங்கிய பாடல்களை வெளியிட்டது. அதில் அன்றைய அனைத்து பிரபல பாடகர்களும் பாடியிருந்தனர்.

பி.சுசீலா தனித்துப் பாடிய தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம், ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே, தாசரே இத்தரணியை அன்பாய், விந்தை கிறிஸ்தேசுராஜா, துதி தங்கிய பரமண்டல, வந்தனம் வந்தனமே, ஸ்தோத்திரம் செய்வேனே, பெத்தலையில்பிறந்தவரை போற்றித்துதி, ஐயய்யா நான் வந்தேன், நான் காணாமல் போன ஆடல்லவா ஆகிய பாடல்கள் கிறிஸ்துமஸ் காலங்களில் தேவாலயங்களில் ஒலித்தன. எம்.லூயிஸ், கே.எஸ்.சேதுபதி இசையிலும் பி.சுசீலா புகழ்பெற்ற கிறிஸ்தவ பாடல்களைப் பாடியுள்ளார். வி.பரசுராமன் எழுதிய

ஆரோக்கிய மாதாவே அம்மா
தீராத பிணி தீர்க்கும் திருத்தாயே வேளைநகர்
ஆரோக்கிய மாதாவே அம்மா
தீராத பிணி தீர்க்கும் திருத்தாயே வேளைநகர்
ஆரோக்கிய மாதாவே அம்மா..

பாடல் கிறிஸ்தவ மக்களிடம் புகழ்பெற்ற பாடலாகும். மாதா என்ற சொல், பி.சுசீலாவின் குரலில் கேட்டுப்பாருங்கள், வித்தியாசமாக இருக்கும் இந்த பாடல் முழுவதும் ஒலிக்கும் தபேலா இசை பி.சுசீலாவின் குரலோடு போட்டி போடும். தொகையறாவுடன் பாடல் எழுதுவதில் வி.பரசுராமன் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். பி.சுசீலாவின் குரலில் அப்படியான தொகையறாவை கேட்பது புது அனுபவம் தான். அப்படியொரு கிறிஸ்தவ பக்திப் பாடல் இது.

அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே

கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே ….
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா ….

திரையிசை பாடல்களை ரசிப்பவர்கள், இப்படியான பக்திப் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். பக்திப் பாடல்களில் உள்ள இசையும், கற்பனை வளமும் ஆச்சரியப்பட வைக்கும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், திரைப்படங்களைத் தாண்டி ஏராளமான பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், அவர் அதிகம் அதில் பாடியதில்லை. ஆனால், அவர் பாடிய ஒரு கிறிஸ்தவ பாடல் காலப்பெட்டகம் என்று கூறலாம்.

வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- …
தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே…

என்ற அந்த பாடல் மெல்லிசை மன்னரின் குரலில் கேட்க கேட்க திகட்டாதது. இந்த பாடலுக்கு முன் மெல்லிசை மன்னர்

அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா …

என்று தொகையறாவுடன் ஆரம்பிப்பார். இந்த அபூர்வமான பாடலை எழுதியவர் வி.பரசுராமன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய மற்றொரு பாடலை அவர் எழுதியுள்ளார்.

அன்னையே ஆரோக்கிய தாயே
அருட்கடலே அம்மா ஆஆஆ
தன்னையே தந்துலகை தந்து மீட்கவந்தவராம்
மன்னவராம் ஆண்டவராம் மகனாகத் தந்தவளே
உன்னையே நம்பி வந்தேன் உற்றதுணை செய்யம்மா..

அம்மா தேவனின் தாயே
அருளமுதான கடலே…
துணை செய்வாய் நீயே
ஆரோக்கிய தாயே…

சுமார் 40 ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயங்களில் ஒலிக்கும் இத்தனை பாடல்களை எழுதிய வி.பரசுராமன் குறித்த குறிப்புகள் கிடைக்கவில்லை. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் பாடலை ரசித்து ரசித்து பாடிய ரோஸி மிஸ்சை ஒருநாள் தேடிப்போனேன். அவர் கன்னியாஸ்திரியாக காட்சித்தந்தார்.
ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *