
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25 அன்று வெண்மணி சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 20 – 25 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் அங்கு அஞ்சலி செலுத்துவது, இன்சூரன்ஸ் ஊழியர்களது அஞ்சலி நிகழ்ச்சியில் தொழிலாளர் இயக்கத் தலைவர்கள், தலித் இயக்கங்களின் தலைவர்கள் உரையாற்றுவது என்று மிக எழுச்சிகரமாக அந்த இயக்கம் நடக்கும். இப்போது சாலை வசதிகள் அதிகரித்து, வெண்மணி வரையிலும் வாகனங்களை அனுமதிக்கிறார்கள். முன்பு தேவூர் என்ற இடத்திற்கு மேல் காவல்துறையினர் எங்கள் வாகனங்களை அனுமதிக்க மாட்டார்கள். அங்கிருந்து நடந்து தான் செல்ல வேண்டும். நாங்கள் அங்கிருந்து வெண்மணிக்கு ஊர்வலமாகச் செல்வோம்.

ஊர்வலத்திற்கு முன்னால் எங்கள் சுடர் கலைக்குழுவின் தப்பாட்டாக் குழு தப்பாட்டம் வாசித்துக் கொண்டே செல்வதால் தோழர்களுக்கு களைப்புத் தெரியாமல் உற்சாகமாக இருக்கும். கலைக்குழு தோழர்களுக்குத் தான் நாக்குத் தள்ளி விடும். எங்கள் சுடர் தப்பாட்டக் குழு முழுக்க முழுக்க எங்களது எல்ஐசி ஊழியர்களால் ஆனது. வாடிப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற மாஸ்டரிடம் பல மாதங்கள் சங்க அலுவலகத்தில் பயிற்சி பெற்று உருவான குழு. எங்களது சங்கத்தின் முன்னணித் தோழரான தண்டபாணி எங்கள் சுடர் கலைக் குழுவின் தலைவராக இருந்தார். ஏனோ தப்பாட்டத்திற்கு ஆதாரமான டிரம்ஸ் பழக யாரும் முன்வரவில்லை. நிகழ்ச்சிகளின் போது, குழுவை வழி நடத்த மாஸ்டர் பழனிச்சாமி வந்துவிடுவார். உடன் அவரது சகோதரர்களான வேல்முருகன், அய்யாவு ஆகியோரில் ஒருவர் டிரம்ஸ் வாசிக்க வருவார்கள். குழுவில் கப்பாஸ் போடுபவனாக அடியேன்.
தப்பாட்டக் கலைஞர்கள் அதை நல்ல தமிழில் கிளுக்கை என்பார்கள். நல்ல கனமான எவர்சில்வர் சொம்பில் உள்ளே சுமார் சைஸ் கற்களைப் போட்டு மூடி சீல் வைத்து, நீளமாக எவர்சில்வர் பிடி வைத்து பற்ற வைக்கப்பட்டிருக்கும். குலுக்கினால் தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணி நடந்து வருவது போல் ஜல் ஜல் என்று தப்புச் சத்தத்தை மீறி ஒலிக்கும். நிகழ்ச்சி முடிந்த பின் இரண்டு நாட்களுக்கு மணிக்கட்டில் வலி பின்னி எடுக்கும். என்றாலும் தப்பாட்டத்தின் உற்சாகத்தில் பின்னால் வரப்போகும் அந்த வலி தெரியாது.

ஒரு முறை வெண்மணிப் பயணத்தில் தேவூரிலிருந்து தப்பாட்ட முழக்கத்தோடு நாங்கள் பேரணியாகக் கிளம்பி விட்டோம். இரண்டு பக்கமும் தை மாத அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்பயிர்கள். நடுவில் குறுகலான சாலையில் எங்கள் பேரணி. செங்கொடியைக் கட்டிக் கொண்டு, டிராக்டர்களில், மாட்டுவண்டிகளில், இருசக்கர வாகனங்களில், பெரிய பெரிய மலர்வளையங்களை எடுத்துக் கொண்டு, அஞ்சலி செலுத்த குழந்தைகள், பெண்கள் என்று குடும்பம் குடும்பமாகச் சென்று கொண்டிருக்கும் உழைப்பாளர் குடும்பங்கள். பாதி வழியில் சற்றே இளைப்பாற ஒரு பெட்ரோல் பங்க்கை ஒட்டிய சிறு தோப்பு போன்ற நிழலான வெற்றிடத்தில் பேரணி சற்று நிற்கிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இன்சூரன்ஸ் ஊழியர்கள் எங்களுக்கு முன்னால் சென்று, அங்கே எங்களுக்காக தண்ணீர் பாக்கெட், ஏதோ ஸ்நாக்ஸ் ஆகியவற்றைத் தர ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த இடத்தில் எங்களைப் போன்றே வேறு நிறைய கோஷ்டிகளும் களைப்பாறிக் கொண்டிருந்தன.
எங்கள் பொறுப்பாளர் எங்களிடம் வந்து, “தோழர், ஒரு கலைக்குழு வந்திருக்காங்க. ஆனா, வாத்தியம் எதுவும் எடுத்துட்டு வரல்லயாம். ரெண்டு பாட்டு பாடணும்னு ஆசப்படறாங்க. கொஞ்சம் பக்கவாத்தியமா தப்புவாசிக்க முடியுமான்னு கேக்கறாங்க,“ என்றார் தயக்கத்தோடு. தோழர் தண்டபாணி, மாஸ்டரைப் பார்க்க, மாஸ்டா், “கலைஞனுக்கு கலைஞன் இது கூட செய்யாட்டி என்ன, வாசிப்போம்,“ என்றார். மாஸ்டர், தண்டபாணியும் மட்டும் தப்பு வாசிக்க, வேல்முருகன் டிரம்ஸ், நான் கிளுக்கையில் என்று நாங்கள் போனோம்.
கறுத்த, ஒடிசலான ஒரு பெண்
அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு
மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன்
உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு
நீ எப்படி இருப்பன்னு நினக்கிறேன்
என்று பாட ஆரம்பித்தாள்.
எங்கள் மாஸ்டர் பழனிச்சாமி தில்லானா மோகனாம்பாள் பாலையா மாதிரி கோடையிடியாகக் குமுறவும் செய்வார். வாய்ப்பாட்டு பாடினால், பாட்டுக்கு இடையூறு இல்லாமல், மிருதங்கம் மாதிரி தப்பை அனுசரணையாகவும் வாசிப்பார். அவருக்கு அடுத்து அப்படி வாசிக்கக் கூடியது எங்கள் குழுத் தலைவர் தண்டபாணி. தெரியாத பாடகிக்கு வாசிக்கிறோம் என்று வேல்முருகனும் அன்று டிரம்ஸை உருட்டி வாசிக்காமல், அடக்கி வாசித்தார். பக்கவாத்தியமாக வரும் தப்பு, டிரம்ஸ் தரக்கூடிய ஒரு துள்ளலான உற்சாகத்தை மீறி ஒரு சோக உணர்வைத் தந்த பாடல் வரிகள், மனதை உருக்கும் குரல் அந்தப் பெண்ணிற்கு.

பாட்டு முடிந்தது. அந்தப் பெண்ணும், உடன் வந்தவர்களும் நன்றி தோழர், நன்றி தோழர் என்றார்கள். அதற்குள் எங்கள் தோழர்கள், “வாங்க.. பாதி தூரம் தான் வந்திருக்கோம். இன்னும் நடக்கணும், கிளம்புங்க.. “என்றார்கள். மீண்டும் பேரணி டகுங்கு டக்கு.. டகுங்கு டக்கு.. என்று தப்புகள் அதிர கிளம்பிற்று.
இது நடந்து ஓரிண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் நானும், தண்டபாணியும், ஒரு டீக்கடையில் டீ சாப்பிடும் போது, கடை டிவியில் ஒரு குண்டான பெண்மணி, அழுத்தமான மேக்கப்பும், உதட்டுச் சாயமுமாக, உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தார்.
அட்ரா அட்ரா நாக்க மூக்க
நாக்க மூக்க நாக்க மூக்க
நாக்க மூக்க நாக்க மூக்க
நாக்க மூக்க நுர்க்க மூக்க
மாடு செத்தா மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
அட்ரா அட்ரா நாக்க மூக்க
நாக்க மூக்க நாக்க மூக்க
என்று தன் கனத்த உருவத்தை மீறிய உற்சாகமான நடன அசைவுகளுடன் பாடிக் கொண்டிருந்தார்.
“யார்னு தெரியுதா?“ என்றான் தண்டபாணி.
இப்படி யார் கேட்கும் போதும் நான் தெரியவில்லை என்று சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டு, “எங்கயோ பாத்த மாதிரி இருக்கு… சட்டுன்னு அடையாளம் தெரியல்ல…“ என்று சொல்வது வழக்கம். அப்போதும் அப்படித் தான் சொன்னேன்.
தண்டபாணி “வெண்மணில நம்ம இந்த அம்மாக்கு தப்பு வாசிச்சுறுக்கோம். அம்மா இல்ல. சின்னவங்கதான். சின்னப் பொண்ணுனு பேரு. இந்த ஒரே பாட்டுல பயங்கர ஃபேமஸ் ஆயிருச்சு… நாமளும் நம்ம கலை வாழ்க்கைல பெரிய பெரிய ஆட்களுக்கெல்லாம் வாசிச்சுட்டோம்,“ என்றான்.
“ஆமா… பின்ன சும்மாவா… நாம எல்லாம் வெறி பிடிச்ச கலைஞர்கள் இல்லயா?“ என்றேன் நான்.
வழக்கமாகச் சொல்வது போல் “ சீனி கம்மியா போடுங்க“ என்று சொல்லியிருந்தாலும் கூட, அன்றைய அந்த டீ ரொம்பவே இனித்தது!
– ச.சுப்பாராவ் (தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



