
எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக சார்பில் அமைச்சர் வன்னி அரசு, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், எந்த திட்டத்தையும் ஆய்வு மேற்கொள்ள ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் அவர் இன்று (ஜூலை 7) செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்களது அதிகாரத்திற்கு உட்பட்டு ஆய்வு செய்யலாம். ஆனால், எந்தவித அதிகாரமும் இல்லாமல் ஆளுநர் எங்கும் வந்து, எந்தத் திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமையில்லை. அதனை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, ஆளுநர் தேவையில்லாமல் சென்று ஆய்வு செய்வதும், தலையிடுவதும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்த அதிகாரம் கண்டிப்பாகக் கிடையாது. இது இங்கு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான் நீடிக்கும். அதிகாரிகளும் இதற்கு உட்பட்டு, இது போன்ற அழைப்புகள் ஏதேனும் வந்தால் அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஆய்விற்கும் உட்படக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.



