ஒரு கதை 19: மனமெனும் விசித்திர நூதனம்

ஆர் ராஜேந்திர சோழன்.

தங்களை வெகு வெகு இயல்பானவர்களாகக் காட்டிக் கொள்ளவே மனிதர்கள் விரும்புகிறார்கள். தனக்குள் தன்னைப் பதுக்கி வைத்துக்கொண்டு நான் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு மோசமானவனோ அல்லது மோசமானவளோ இல்லை.. நான் எல்லோருக்கும் நல்லவன்(ள்) .இப்படி சொல்வதிலோ அல்லது அப்படிக் காட்டிக் கொள்வதிலோ விருப்பமில்லாதவர்கள் எவரேனும் இந்த உலகினில் உண்டா?. வாழ நேர்ந்திட்ட இந்த உலக வாழ்க்கையைப் பலரும் தனக்கென வரித்துக் கொள்வதில்லை. பிறரின் பார்வையில் நாம் எப்படி புரிந்து கொள்ளப்படுவோம் என்பதை அறிந்து கொள்வாதற்கான வேட்கை பெரும் கடல் அலையாக எழும்பி மனிதர்களின் மனதை வதைத்துக் கொண்டேயிருக்கிறது. ஊர் எப்படி நம்மை உற்று நோக்குகிறது. உலகத்தார் நம்முடைய நடவடிக்கைகளை கவனிக்கிறார்களா? கவனித்தால் இதனைக் குறித்து என்னவெல்லாம் சொல்வார்கள். இந்தக் கவலையும்,கவனமும் பலரையும் கவ்விப் பிடித்திருக்கிறது.

நுண் அதிகார அலகான குடும்ப அமைப்பில் கணவன், மனைவிக்கு இடையேயான உறவில் நிகழும் விரிசலுக்குப் பின் உள்ள பொருளாதாரக் காரணங்கள் வெளிப்படையானவை. அவையாவும் தமிழ்ச்சிறுகதைகளில் பேசப்படுகிற அளவிற்கு அவர்களுக்கு இடையிலாடும் மனம்சார் சிக்கல்கள் கவனப்படுத்தப்படுவதில்லை. அதிலும், குறிப்பாக பாலியல்சார் உளச்சிக்கல்களை கதைகளாக உருமாற்றுவது எழுத்தாளர்களுக்கு ஆகப் பெரும் சவாலாகத்தான் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது. அப்படியானில் எண்பதுகளின் துவக்கத்தில் இந்தப் புலத்தில் இயங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கும் என்பதை தனித்துச் சொல்ல லேண்டியதில்லை.
மனிதர்களின் ஆண், பெண் உறவுகள் குறித்த உளச்சிக்கல்களைக் கண்டறிவது ஒன்றும் எளிதில்லை. மனிதர்களின் மனதிற்குள் பதுங்கியிருந்து வித்தை காட்டும் இந்த விசித்திரதைக் கதையாகக் கடத்துவதற்கு எழுத்தாளர்கள் முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். எழுத்தாளர் கு.ப.ரா தன்னுடைய சிறிது வெளிச்சம் கதையில் ஒளிக்கீற்று பற்றிப்படரும் சின்ன இடைவெளியினை கதவிடுக்கின் வழியாகத் திறந்து வைத்தார். அந்த சிறிது வெளிச்சம்தான் பலருக்கும் மனதின் நுண்கசப்பைக் கதையாகக் கடத்துவதற்கான வழியினை வடிவமைத்துத் தந்தது. எழுபதுகள் வரையிலும் நாசுக்கான மொழியில் மத்தியதரவர்க்கத்து வாழ்க்கைக்குள் நகர்ந்து கொண்டிருந்த இந்தக் கதை மொழியில் தன்னுடைய நிலப்பரப்பான ஆற்காடு மாவட்டத்திற்கு மட்டுமே சொந்தமான கொச்சை மொழி கொண்டு அதனைக் கலைத்து அடுக்கியவர் எழுத்தாளர் ஆர் ராஜேந்திர சோழன்.

எழுத்தாளர் ஆர் ராஜேந்திர சோழனின் படைப்புகளின் தனித்தன்மையே மனதிற்குள் பதுங்கியிருக்கும் சொற்களை உருவி எடுத்துத் தைத்து தரப்பட்டவை என்பதுதான். . இதனை அவருடைய எட்டுக் கதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளுமே உணர்த்துகின்றன.எட்டுக் கதைகள் புத்தகமாக வருவதற்கு முன்பு அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு விதத்தில் அமைப்பினை உருவாக்கிய தளகர்த்தாக்களில் ஒருவர் ஆர்.ராஜேந்திர சோழன். தமிழ் தேசிய அரசியலின் பக்கம் பிறகான நாட்களில் அவரின் கவனம் சென்ற போதும் கதைகளை அவர் கைவிட்டதேயில்லை. தனபாக்கியத்தோட ரவா நேரம் எனும் கதை வெளி வந்த போதுபொது வாசகர்களாலும் அமைப்பிற்குள் இயங்கிய எழுத்தாளர்களாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஆர் ராஜேந்திர சோழன்.

மார்க்ஸிய இலக்கியக் கோட்பாடுகளை தன்னுடைய தத்துவப் பார்வையாகக் கொண்டவர் ஆர். ராஜேந்திர சோழன். அதனாலயே அவர் அவருடைய தத்துவக் கட்டுரைகளை அஸ்வகோஷ் எனும் பெயரில் எழுதினார். தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கிய உலகத்தில் மிகுந்த கவனம் பெற்ற உடல் அரசியல்சார் கதைகளின் மூத்த கதைகளே இவருடைய எட்டுக்கதைகளும், அவர் எழுதிய இன்னபிற கதைகளும். ராஜேந்திர சோழன் . எழுபதிற்கும் மேலாக சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள்கூட எழுதிடத் தயங்கிய பெண்வாழ்வின் இருளான பக்கங்களை தன்னுடைய பல கதைகளுக்கான கச்சாவாக எடுத்துக்கொண்டவர் எழுத்தாளர் ஆர். ராஜேந்திர சோழன். அவருடைய எட்டுக் கதைகள் தொகுப்பின் தனித்த கதை புற்றில் உறையும் பாம்புகள். இது அவருடைய ஆகச் சிறந்த கதை. இந்தக் கதையின் கட்டமைப்பும், சொல்முறையும் அதற்கு முன்பு தமிழ்ச் சிறுகதைகளில் காணப்படாத ஆச்சர்யங்களில் ஒன்று. தென்னாற்காடு மாவட்ட நிலத்தின் தனித்த வெட்கையில் உருவான சொற்களைக் கட்டி எடுத்து எழுத்தாளர் உருவாக்கிய புற்றில் உறையும் பாம்புகள் எனும் சிறுகதை தமிழ்ச் சிறுகதைகளில் தனித்தது.

கதை முழுவதுமாக வனமயிலு எனும் குடும்பப் பெண்ணொருத்தி தொன தொனவென பேசிக் கொண்டேயிருக்கிறாள். தன் அருகில் வேலை செய்து கொண்டிருக்கும் அவளுடைய புருஷன கந்தசாமியிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு சல சலக்கிறாள். நிஜத்தில் அவள் கந்தசாமியோடு மட்டும் பேசவில்லை. அவளுக்குள்ளேயேதான் பேசுகிறாள். அது அவளறியாமல் தொண்டைக்குழியில் இருந்து வெளியேறி புறவெளியில் உழைத்துக்கிடக்கும் அவளுடைய கணவனுக்கும், கதை கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கும் கேட்டு விடுகிறது. அவள் தன்னுடைய வீட்டு தாழ்வாரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவளை வைத்த கண்ணை எடுக்காமல் எதிர் வீட்டிலிருக்கும் வாலிபன் குறு குறுவென பார்க்கிறான். அவன் பார்க்கிறானா எனத் தெரியவில்லை. ஆனால் அவன் இவளையே பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறாள்.

இவள் கவனிக்காதபோது அவன் பார்ப்பதாக தனக்குள் நினைத்துக் கொள்கிறாள். “ கண்ணைப் பாரேன், நல்லா கோழி முட்டையாட்டாம், வச்ச கண்ண எடுக்காம பார்க்குறத.. இவனெல்லாம் அக்கா, தங்கச்சியோட பொறந்திருக்க மாட்டானா? எம்மா நேரமா பார்த்துக்கிட்டு இருக்கான்யா இதே மாதிரி”…அந்த எதிர் வீட்டு வாலிபனை பார்க்க ஆரம்பித்து புருஷனிடம் குற்றம் சொல்லத் துவங்கியவள் கதை முடியும்வரை சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். கதைக்குள் எந்தப் புள்ளியிலும் எதிர்வீட்டு வாலிபன் வெளிப்படையாக தென்படவில்லை. வனமயிலுவின் சொற்களின் வழியாகத்தான் வாசகனால் அவன் யார் என்பதையே அனுமானிக்க முடியும். வீட்டுத் தாழ்வாரத்தில்,திண்ணையில், ஏன் வீட்டிற்குள் போய் வேலையை அவள் தொடர்ந்து செய்யும்போதும் அவளை அவன் இச்சை கொண்டு பார்க்கிறான், விடாமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறான் என்பது அவளின் குற்றச்சாட்டு.

அத்தனையையும் இவளுடனே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் கணவனிடம் முறையிடுகிறாள். அதுவும் அவனுடைய மனதை மூர்க்கமாக்கிடும் சொற்களை பிரயோகிக்கிறாள். ” இங்கின ஒரு முழு ஆம்பிள இருக்கும்போதே இப்பிடி முறைச்சுப் பார்க்கிறானே, விட்டா என் கைய பிடிச்சு இழுப்பாம் போலேயே, இழுப்பான் ,இழுப்பான், தொட்டுப் பார்க்கட்டும்,தொடப்பக்கட்டை பீஞ்சிறாது”.. இதன் வழியாக அவள் கணவனுக்கு ஒன்றை உணர்த்த விரும்புகிறாள். தன்னை எளிதாக கணவன் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது அவளுடைய விருப்பம். அதற்கான சொற்களையே விடாமல் பேசிக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் கதையின் ஊடாக வனமயிலு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதனையும் எழுத்தாளர் கோடிடிடுகிறார்.

“கட்டுனவன் பக்கத்தில இருக்கும் போதே இப்பிடி வெறிச்சுப் பார்க்கிறானே. என்னைய என்னன்னு நினைக்குறான்.ஊருக்குள்ள பல பொண்ணுக இப்பிடி இருக்குதே, லேசா சாடை காட்டுனப் போதும் உடனே வந்துருவா வனமயிலுன்னு நினைக்கிறானா. புருஷன்காரன் எதுவும் சொல்லாமத்தான இருக்கான். இன்னையாராம் யாருடா நீ இப்பிடி முறைச்சுட்டுறுக்க, அப்பிடி ரெண்டு போடு போடிருந்தா, இப்பிடி பார்ப்பானா? ஒருவேளை வனமயிலோட புருஷன உழைப்பாளி. ஆனா நாம அப்பிடியில்ல வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுகிட்டு அழுக்குப்படாம இருக்கோம், அரசாங்க உத்தியோகம் பார்க்குறோம்ங்கிற திமிரா இருக்குமோ? இந்த மினுக்கட்டிக்கெல்லாம் சபலப்படுறவ இல்ல இந்தா வனமயிலு தெரிஞ்சுக்கோ. வந்தா முகவாய்க்கட்டை பேந்து போகும் பார்த்துக்க””.இப்பிடி நகர்ந்து போகும் சொல் அடுக்குகளின் வழியாக வனமயிலுதான் அவனை குறு குறுவென பார்த்துக் கொண்டேயிருக்கிறாள் என்கிற எளிய உண்மை, கதை வாசிப்பவர்களுக்கே புலனாகிவிடுகிறது. இத்தனை வெளிப்படையாக பெண்கள் தன்னுடை உள்ளக்கிளர்ச்சியை நேரிடையாகவோ அல்லது எதிர்நிலையில் இருந்தோ தமிழ்ச்சிறுகதைகள் அதுவரையிலும் பேசியிருக்கவில்லை. வனமயிலுவின் குரல் அதிர்ச்சியூட்டவில்லை. எதார்த்தமாகவே நகர்கிறது.

கதையைச் சொல்வதற்கும் அதை நடத்துவதிற்கும் இடையில்தான் கலையின் வெகுமதி படிந்திருக்கிறது. துளி துளியாக கதையை வனமயிலின் சொற்களின் வழியாகவே கடத்துகிறார் எழுத்தாளர். வனமயிலு எதிர்வீட்டு முட்டைக்கண்ணு இளைஞன் குறித்த பிராதினைப் படித்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய கணவன் கந்தசாமியைத் தேடி வருகிறார் மற்றொருவர். வந்திருக்கிறது யாருன்னு பாரு என்கிறான் அவன். வந்திருக்கிறது ஆம்பிளையாட்டம் இருக்குது, என்னைய போய் பார்க்கச் சொல்ற, என்னைய என்ன மத்தவளுகமாறின்னு நினைச்சுக்கிட்டியா. நீ போயிப்பாரு என கதவிற்குப்பின் ஒளிந்து கொள்கிறாள். கதவிற்குப்பின்தான் நிற்கிறாளே தவிர, அவள் வந்திருப்பவனை கவனிக்கிறாள். கதைக்குள் வந்திருப்பவனை உற்றுக்கவனிக்கும் வனமயிலுவின் பார்வை இயல்பாகவே கதைக்குள் நகர்கிறது.

அவனுக்கு குடிக்கிற தண்ணீரைக்கூட புளிபோட்டு விளக்கிய டம்ளரில் தருகிறாள். தன்னை மிகவும் யோக்கியம் என ஒவ்வொரு புள்ளியிலும் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். முட்டைக் கண்ணன் தன்னைக் குறு குறுவென பார்ப்பதாக குற்றம் சாட்டியவள்தான், தன்னுடைய கணவனைப் பார்க்க வந்த பெரிய மனுஷனைப் பார்த்தும் பார்க்காதது போல பார்க்கிறாள். ஆனால் புருஷனோ பிறரோ பார்த்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் எனத் தடுமாறுகிறாள். எல்லாம் முடிந்து அந்த புதியவன் சென்றபிறகு வாசலுக்கு வந்து எதிர்வீட்டு வாலிபன் தென்படுகிறனா என்று எட்டிப் பார்க்கிறாள். ” வந்துட்டான்,வந்துட்டான். அந்த முட்டைக்கண்ணன்” என கணவனிடம் மறுபடியும் புலம்ப ஆரம்பிக்கிறாள்.அப்போது கந்தசாமி, ” போடி அந்தாண்ட சும்மா பிலு பிலுன்னுக்கிட்டு” என்றபடி கடக்கிறான்.

எல்லோரின் மனதிற்குள்ளும் பதுங்கியிருக்கும் மாற்றுப் பால் மீதான ஈர்ப்பு வெளிப்படவே செய்யும் என்பதை நுட்பமாக பதிவுறுத்திய கதை. புற்றில் உறையும் பாம்புகள். கதை வெளிவந்நந. நாட்களில் கடும் எதிர்ப்பினை எழுத்தாளர் தன்னுடைய சகாக்களிடம் இருந்தே எதிர்கொண்ட கதையிது. பிறகான நாட்களில் கவிதாயினிகள் தங்களுடைய தனித்த உடல்சார் வலிகளையும் கொண்டாட்டத்தையும் எழுத்தாக்கிடும் ஆற்றலை அவர்களுக்கு வழங்கிய கதை புற்றில் உறையும் பாம்புகள் இடம் பெற்றிருந்த எட்டுக்கதைகள் தொகுப்பு. இது இடதுசாரிக் கலைஞர் சமூகத்திற்கு வழங்கிய பாலினபேதத்தின் நுண் பக்கங்களைக் கட்டுடைத்த கதைத் தொகுதி. – ம.மணிமாறன் ( தொடரும்)

ஒரு கதை என்ற இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *