
பெண் குழந்தைகளிடம் முறையின்றி நடந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சரை நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் பாஜக மனு அளித்துள்ளது.
சென்னையில் கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூலை 4) சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது தவெக அரசு மீதான புகார்கள் அடங்கிய மனுவை அவர்கள் ஆளுநரிடம் அளித்தனர்.
இதன் பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பெண் குழந்தைகளுடன் நடந்து கொண்ட விதம் குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத தனிநபர்கள் ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம்.
தவெக அரசு பொறுப்பேற்று 54 நாட்களில், 151 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த கால திமுக அரசுக்கும், இந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது. முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்று ஆளுநரிடம் மனு மூலமாக தெரிவித்திருக்கிறோம். என்றார்.
பாஜக தலைவர்கள் மனு அளித்தது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று , பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இணைந்து, தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன்,பெண் குழந்தையிடம் முறையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர இரண்டு தனிநபர்கள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டு, அது சட்டவிரோதமான செயல் என்றும், ரகசியக் காப்பு உறுதிமொழியினை மீறும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாதவாறு உறுதி செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



