தவெக தலைவர்களுக்கு எதிரான திமுக மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சாட்சிகளை கலைக்கும் வகையில் தவெக தலைவர்கள் பொதுவெளியில் பேசுவதற்கு தடைவிதிக்கக்கோரிய திமுகவின் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றியதோடு, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த 2 -ம் தேதி தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “கரூர் சம்பவத்திற்கு அப்போதைய திமுக அரசு தான் காரணம். இதற்கு நாங்கள் வட்டியும் முதலுமாக பழி தீர்ப்போம்” என்று பேசினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையானது. இதையடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசேபா அகமதி தாக்கல் செய்த இந்த இடைக்கால மனுவில், “தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தவெகவினர், கரூர் விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசவோ அல்லது அரசியல் எதிரிகள் மீது பழி சுமத்தவோ தடை விதிக்க வேண்டும்.

மேலும், சிபிஐ விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களே தற்போது தவெக ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகிப்பதால், அவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தவும், கலைக்கவும் வாய்ப்புள்ளது. ஜூலை 10-ம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அரசு வேலைவாய்ப்பு மற்றும் இதர நலத்திட்ட உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் இந்த வழக்கில் மிக முக்கியச் சாட்சிகள் என்பதால், இந்தச் சந்திப்பு விசாரணையைப் பாதிக்கலாம்.

அத்துடன் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த 2-ம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “கரூர் சம்பவத்திற்கு அப்போதைய திமுக அரசு தான் காரணம். இதற்கு நாங்கள் வட்டியும் முதலுமாக பழி தீர்ப்போம்” என்று பேசியது சர்ச்சையானது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள ஒரு வழக்கில், சிபிஐ விசாரணை முடிவடைவதற்குள், குற்றம் சாட்டப்பட்ட ஒரு அமைச்சரே இப்படிப் பேசுவது சட்டவிரோதமானது மற்றும் நியாயமான விசாரணைக்கு எதிரானது என்று திமுக மனுவில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 6) நீதிபதிகள் இசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்னிலையில் இந்த அவசர முறையீடு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு நாளை (ஜூலை 7) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *