
பல கி.மீ தூரத்திற்கு மின்விளக்குகள் எரியாததால் நத்தம் சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளம் ஐஓசி அலுவலகம் அருகே இருந்து, நத்தம் வரை 35 கி.மீ.க்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியை மேற்கொண்டது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து நத்தம் பறக்கும் பாலம் வழியாக சென்னைக்கு ஊமச்சிகுளம், நத்தம், துவர்ங்குறிச்சி வழியாக திருச்சி சென்றடையலாம். அங்கிருந்து சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலையை எளிதாகப் பிடிக்கலாம். இந்த வழியாக சென்னைக்குச் செல்வதால் 24 கி.மீ பயண தூரம் குறைகிறது. இதன் காரணமாகவே நத்தம் பறக்கும் பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலத்தின் வழியே மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட,ங்கள், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அன்றாடம் சென்று வருகின்றனர். இது தவிர டூரிஸ்ட் வேன்கள், தனியார் பஸ்கள், லாரிகள் என அன்றாடம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊமச்சிகுளம் வழியாக சென்னை செல்கின்றன.
இது தவிர நத்தம் பகுதி மட்டுமின்றி அலங்காநல்லூர், வாடிப்பட்டி, முடுவார்பட்டி, பாலமேடு,அலங்காநல்லூர், லிங்கவாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பழம், பூ, காய்கறிகள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள காய்கறி மற்றும் பூச்சந்தைக்கு நத்தம் பறக்கும் பாலம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இத்னால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நத்தம் சாலையில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
ஏனெனில்,. மாரணி விலக்கில் இருந்து மந்திகுளம் வரை உள்ள சுமார் இரண்டரை கிலோ தூரத்திற்கு 20 நாட்களுக்கு மேலாக மின்விளக்குகள் எரியல்லை. மாரணியில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கூளப்பாண்டி, கொடிமங்கலம், மந்திகுளம் வழியாகத்தான் நத்தம் உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் செல்ல முடியும். ஆனால், நத்தம் பறக்கும் பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கி விட்டால், மாரணியில் இருந்து மந்திகுளம் வரை மின்விளக்கு இல்லாததால் இருளில் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கூளப்பாண்டியைச் சேர்ந்த நாகராஜ் கூநுகையில், ” மாரணி விலக்கில் இருந்து மந்திகுளம் விலக்கு வரை மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் மேய்ச்சலுக்கு கால்நடைகளுக்கு அழைத்துச் சென்று விட்டு இருப்பிடத்திற்கு இரவு நேரத்தில் அழைத்தும் வரும் போது பெரும் சிரமமாக உள்ளது.அத்துடன் அவ்வழியாக வரும் வாகனங்கள் இருட்டில் கால்நடைகள் மீது மோதி விபத்தும் அடிக்கடி ஏற்படுகிறது. மாதம் பத்து நாட்களுக்கு மேல் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவாகி விட்டால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் அந்த பகுதியைக் கடக்க வேண்டியதுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு எரியாத மின்விளக்குகள் எரிவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.



