பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முடக்குவதா?: விஜய் மீது நயினார் பாய்ச்சல்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கியிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகே.ந்திரன் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கியிருக்கிறது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பின் முறைப்படி அனுமதி பெற்ற ஒரு திட்டத்திற்கு, ‘ஓடுதளம் அமைக்க முடியாது’ என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்; மேலும், இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு செய்யும் துரோகமாகும்.

அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே, இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, நீர்நிலைகளைக் கணக்கில் கொண்டுதான் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கின என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏற்கெனவே தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கும்போது, இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது ஏன்? இது உண்மையான தொழில்நுட்பப் பிரச்னையா அல்லது, உங்கள் கட்சியின் மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் வளர்ச்சியைப் பலியிடும் செயலா?

இட நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த இயலாத நிலையில், இத்திட்டத்தைத் தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைப் பறித்துவிடும். எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *