
திருமாவளவன் குறித்து பேசிய சொற்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வைகோ கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘தவெகஅமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும், தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும், தவிர்க்க மாட்டேன்’ என திருமாவளவன் பேசியது குறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகோ, “இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என கிண்டலாக பதிலளித்தார். திருமாவளவனை கேலி செய்த வைகோவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில், வைகோவின் கருத்துக்கு அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலளித்தார். அப்போது அவர், “பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே எனது பார்வை. இதை தமிழக அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியாது. வைகோவின் நோபல் பரிசு பரிந்துரைக்கு என் நன்றி; ஒருவேளை பரிசு கிடைத்தால் அவருக்கே முதல் நன்றி சொல்வேன்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூலை 9) சந்தித்தார். அப்போது அவர் கூறுகையல், , “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருமாவளவனுக்கு நான் தொடர்ந்து ஊக்கமளித்து, என்னால் இயன்ற அளவு பக்கபலமாக நின்று வருகிறேன். எதிர்காலத்திலும் எனது ஆதரவு அப்படியேதான் இருக்கும். அவர் மீது எனக்கு எந்தவித கோபமோ அல்லது வருத்தமோ கிடையாது. நான் பேசிய சொற்களால் அவரது மனதைப் புண்படுத்தியிருக்குமானால், அந்த சொற்களை நான் முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதோ அல்லது திருமாவளவன் மீதோ எனக்கு இம்மியளவும் கசப்புணர்வு கிடையாது.
அவர் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பயன்படக்கூடிய வகையில் அவர் பணியாற்றி வருகிறார். தனக்கென்று ஒரு குடும்பம் கூட இல்லாமல் பொதுவாழ்விற்காகவே அவர் வாழ்ந்து வருகிறார் என்பதை நானே பலமுறை அவரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஜனநாயக ரீதியாகக் கருத்து சொல்வது அவருடைய உரிமை. அதற்கு நான் எதிர்வினையாற்றிய விதம் அவரது மனதைக் காயப்படுத்தியிருந்தால், அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் கூறுகிறேன், நான் பேசிய வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.” என்றார்.



