தொகுதி மறுசீரமைப்பை ஒத்துக்கொள்ள மாட்டோம்… கரூரில் விஜய் பேச்சு

யார் என்ன தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தாலும் தமிழ்நாடு அதை ஒத்துக்கொள்ளவே ஒத்துக்கொள்ளாது என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

கரூரில் இன்(று ஜூலை 12) மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் பேசினார். அப்போது அவர் பேசுகையில், , “ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும், சில காயங்களை, வலியை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான். பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?

நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துவிட்டது போலீஸ்தான், இப்படி நடந்தால் அப்படிச் செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படிச் செய்யுங்கள் எனச்சொல்லி பிரஷர் போட்டது யார்? கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தனர். நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். என் அக்கா, தங்கைகளை இழந்திருக்கிறேன். வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுவதா?

நான் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? பணமா, ஜனமா எனக் கேட்டால்; எனக்கு ஜனம்தான் முக்கியம். விஜய் ஏன் அதைப் பற்றி பேசவில்லை, இதைப் பற்றி பேசவில்லை என்கிறார்கள். பாட்டுக்கு பாட்டு கச்சேரி பண்ண எங்களுக்கும் தெரியும். பண்ணலாமா! என்னை பேசு பேசு என்று சொல்கிறார்கள்; ஆனால் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள்.

‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். யார், எந்த கட்சி என்று கூட சொல்லவில்லை; அவர்கள் ஓடிவிட்டனர். ‘என் அப்பா பீரோவுக்குள் இல்லை’ என சொல்லுகிறார்கள். இவர்களுடன் ஒரே கூத்தாக இருக்கிறது. ‘குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்’. 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். இதுக்கும் மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்.

பேசி, பேசி பிரச்னையை வளர்த்துக் கொண்டு, பிறர் மீது பழியை போட்டுவிட்டு, மக்களை தெருவில் அம்போ என விடும் அரசியல் எனக்குத் தேவையில்லை, செய்யப்போவதும் இல்லை. ‘டாக் லெஸ், வொர்க் மோர்’ இது தான் நமது பாலிசி. மத்திய அரசிலிருந்து அந்தத் தொகுதி மறுசீரமைப்பு மீண்டும் கொண்டு வரப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. யார் என்ன தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தாலும் தமிழ்நாடு அதை ஒத்துக்கொள்ளாது. நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது, அதைப் பறிக்க விடவும் மாட்டோம்.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள். அவர்கள் எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா? நம்ம ஆட்சி அமைந்ததில் இருந்து என்னென்னவோ சொல்கிறார்கள். சோஃபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள். அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மெஷினே திமுகதான்.

உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் தர முடியாது எனச் சொல்லுங்கள்; நான் இருக்கிறேன் உங்களுடன். அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்பட உள்ளது. நான் கரூருக்கு போகக் கூடாது என கட்டுப்பாடு போட பார்த்தனர். இது திமுக ஆட்சி இல்லை. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும், தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். வர இருக்கும் இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை வெளுத்து விடுங்கள்” என்றார் விஜய்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *