நினைவே சங்கீதம் 20: சைக்கிள் சரிதா

1980களின் இறுதி வரை பார்க்கிங் ஸ்பேஸ் என்ற ஒன்று எங்கும் கிடையாது. இரு சக்கர வாகனங்களே அபூர்வமான அந்தக் காலத்தில் அலுவலகங்கள் எங்கும் சைக்கிள் ஸ்டாண்ட் தான். அலுவலகங்களில் பெண் ஊழியர்களே மிகவும் குறைவு. நான் வேலைக்குச் சேர்ந்த போது எங்கள் அலுவலகத்தில் இரண்டே இரண்டு பெண் ஊழியர்கள் தான் இருந்தார்கள். அதிலும் தேசிய வாகனமான சைக்கிளில் அலுவலகம் வரும் பெண்கள் மிக மிக அபூர்வப் பிராணிகள். அப்படி சைக்கிளில் வந்த ஒரு பெண் ஊழியருக்கு சைக்கிள் சரிதா என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அவர் சைக்கிளில் வந்து ஸ்டாண்ட் போடும் போது, தைரியமான சிலர் சோலைக் குயிலே… காலைக் கதிரே.. என்று பாடுவது கூட உண்டு. சைக்கிள் சரிதா அதைக் கண்டு கொள்ள மாட்டார்.

அந்த சைக்கிள் சரிதா என் அக்காவுடன் கல்லூரியில் படித்தவர். என்னை எனது அரை டிராயர் காலத்திலிருந்து அறிந்தவர் என்பதால் என்னை வாடா, போடா, என்று விரட்டிக் கொண்டே இருப்பார். எனவே, எனக்கு சோலைக் குயிலே பாடவே பயம். அப்போது எங்கள் மனமகிழ் மன்றத்தின் ஆண்டுவிழா கோலாகலமாக நடக்கும். நகரின் ஏழு கிளைகளுக்கும், கோட்ட அலுவலகத்திற்கும் சேர்த்து ஒரே மன்றம். ஒரே ஆண்டுவிழா. பாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டி என்று ரகளையாக இருக்கும். நான், ரஹீம் என்றொரு தோழரும் வழக்கமாகப் பாட்டுப் போட்டியில் மாற்றி மாற்றி முதல்பரிசு வாங்குவோம்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, லியோனி போன்றோரெல்லாம் பெரிய அளவில் புகழ் பெறுவதற்கு முன் எங்கள் மன்ற ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார்கள். அவர்கள் கையில் நான் பரிசுகள் வாங்கியதுண்டு. அப்படியான காலத்தில்தான் ஸ்ரீகலா என்றொரு தோழர் மதுரைக்கு மாறுதலில் வந்தார். அவர் முறையாக இசை பயின்றவர். கச்சேரி செய்யுமளவு ஞானமுள்ளவர். சமீபத்தில் கூட அவரது புதல்வன் மிருதங்கம் வாசிக்க அவர் நல்ல கர்னாடக இசை கீர்த்தனைகள் பாடும் காணொளிகள் சிலவற்றை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். ஸ்ரீகலா பாட்டுப் போட்டிக்கு வர ஆரம்பித்ததும் நிலைமை மாறிவிட்டது.

சோலைக் குயிலே…
காலைக் கதிரே…
அள்ளும் அழகே..
துள்ளும் ராகமே…
துள்ளும் ராகமே…
வண்ண தெங்கழனி
காலைக்கு வாழ்த்து பாடுதே…
சின்ன பூங்குருவி
நாளைக்கும் சேர்த்து தேடுதே…
அசைவில் இசையில் கன்னி தமிழே
வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை
மேடையின் மீது கண்ணாலே கவிபாடி
பொன் வண்ண மீனாடுதே.. ஓ… ஓ….
என்று அவர் பாடினால் அசையும் பொருள் நிற்கும். நிற்கும் பொருள் அசையும். அது மத்யமாவதி ராகம் என்று அப்போது எனக்குத் தெரியாது. அவர் ஒவ்வொரு பாட்டுப் போட்டிக்கும், பெரும்பாலும் சோலைக் குயிலே தான் பாடுவார். அவர் சோலைக்குயிலே ஹம்மிங்கை ஆரம்பிக்கும் போதே, கூட்டத்திலிருந்து யாரேனும் ஒருவர் இந்த வருஷமும் சைக்கிள் சரிதா பாட்டுதானா… என்பார். மற்றொரு குரல், “ராவ்,.. உனக்கு செகண்ட் பிரைஸ் தான்“ என்று கத்தும் ! காலப் போக்கில் அடுத்த தலைமுறை பாடகர், பாடகிகள் வந்து விட்டார்கள். ஆண்டுவிழாவிற்கு செல்வதே கூட அரிதாகி விட்டது. இன்றும், சோலைக் குயிலே பாட்டை எங்கு கேட்டாலும், ஸ்ரீகலாவின் முகமும், சைக்கிள் சரிதாவின் முகமும் தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வரும்.

இப்போது எல்லோரும் ஓய்வு பெற்றாகி விட்டது. சில மாதங்களுக்கு முன் ஒரு திருமண வரவேற்பில் சைக்கிள் சரிதா அக்காவைப் பார்த்தேன். டின்னர் முடிந்து ஐஸ் கிரீம் வாங்கும் இடத்தில் எனக்குப் பின்னால் அவர். ஒரு காலத்தில் இந்த ஐஸ்கிரீம் ஒரு அரிய பொருளாக இருந்தது. அலுவலக விருந்துகளில், பயிற்சி முகாம்களில் ஐஸ்கிரீம் தருவது பெரிய விஷயமாக பேசப்படும். சைக்கிள் சரிதா உள்ளிட்ட என் பலஅலுவலக அக்காக்கள் ஆடு, கோழி என்று வெளுத்து வாங்குவார்கள். ஆனால், 50 மிலி அருண் ஐஸ் சாப்பிட்டால் உடம்பு குண்டாகி விடுமாம் ! சாப்பிட மாட்டார்கள் ! ஆனால், அந்த அரிய பொருளை ஏன் வாங்காமல் விட வேண்டும்? வாங்கி என் போன்ற ஒல்லிக் குச்சிகளுக்குத் தருவார்கள். அந்த பழைய பழக்கத்தை மறக்காமல் அக்கா “ஒன்னோட ஐச முடிச்சுட்டு இத வாங்கிக்க.. நா வாங்கி வெச்சுக்கறேன்,“ என்றார்.

எனக்கு சட்டென்று சோலைக்குயிலே பாட்டும், அவரது பட்டப் பெயரும் நினைவிற்கு வந்தது. “அக்கா, முந்தி ஆபீஸ்ல உங்கள சைக்கிள் சரிதான்னு சொல்வாங்க, தெரியுமா?“ என்றேன். “தெரியும்.. தெரியும்.. அந்த பேர் வெச்ச ஆள் யாருன்னும் தெரியும்… ஏம்பா, கறுப்பா, குண்டா இருந்தா… சரிதாவா? அவ குட்டச்சி.. நா என்ன ஹைட்…” என்று சிரித்தார். ஆமாம். .. அக்கா நல்ல ஹைட். சித்திரைத் திருவிழாவின் போது, செயின் ஸ்நாட்ச்சிங், ஈவ் டீசிங் ஆட்களைப் பிடிக்க, நல்ல பட்டுப் புடவை, நிறைய நகை, தலை நிறைய பூ வைத்துக் கொண்டு மஃப்டியில் வரும் பெண் போலீஸ்கள் கெட்அப்பில் தான் அன்றும் அவர் அந்த திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

“ஆமாக்கா… உங்களுக்கு சரிதான்னு வெச்சுருக்கக் கூடாது… வேணும்னா செரீனா வில்லியம்ஸ்னு வெச்சுருக்கலாம்,“ என்றேன்.. “உனக்கு போய் ஐஸ் கிரீம் தரணும்னு கைல வெச்சுட்டு நிக்கறேன் பாரு… என்னச் சொல்லணும்,..” என்று என் தலையில் செல்லமாய் குட்டியது சைக்கிள் சரிதா… இல்லையில்லை செரீனா வில்லியம்ஸ்!
ச.சுப்பாராவ் (தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *