
மதுரை அருகே இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ் இன்று (ஜூலை 13) அதிகாலை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
அத்துடன் சாலையோரம் உள்ள பயணிகள் நிழற்குடையில் தனியார் ஆம்னி பஸ் மோதியது. இதில் நிழற்குடை சுக்குநூறானது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த பஸ் மோதியதில் அரசு பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு பஸ்களிலும் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இரு பஸ்களிலும் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதில் 4 ஆண்கள், 1 பெண் என தெரிய வந்தது.. மேலும் காயமடைந்த 42 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சரக டிஐஜி அபினவ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.



