எ.வ.வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் எ.வ. வேலு. அக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பிறகு, விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 25-ம் தேதி எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதற்கிடையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து, எ.வ.வேலு மீதான லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அம்முறையீட்டில் இவ்வழக்கை அவசரமாக நாளைய தினமே விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைப்பட்டுள்ளது. ஆனால். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *