
தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சனம் செய்ததாக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று ( ஜூலை 18) கலைஞர் பிறந்த நாள் கூட்டம், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று ( ஜூலை 20) காலை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததாக வீட்டிற்குள் புகுந்து மார்க்கண்டேயனை போலீஸார் கைது செய்தனர். இதனால் திமுகவினர் காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விமர்சனம் செய்ததாக தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர். தற்போது விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



