
தவெக அரசுக்கு ஜனநாயக வழியில்.தக்க பாடம் புகட்டப்படும் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கடந்த சனிக்கிழமையன்று ( ஜூலை 18) கலைஞர் பிறந்த நாள் bபாதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று ( ஜூலை 20) காலை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவர் மீது மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் அராஜகமாக கைது செய்யப்பட்டதற்கு திமுக துணைப்பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.



