காவல்நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலையா?: வீடியோ வெளியானதால் அதிர்ச்சி

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் அருணாச்சலம்(26). இவர் அரசு மதுபானக் கடை பாரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகத் தென்பாகம் காவல்துறையினர் அருணாசலத்தை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 120 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர். அருணாச்சலத்தைக் காவல்துறையினர் விசாரணைக்காகத் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி மாலை அருணாச்சலம் உடலில் தலை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் தென்பாகம் காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவரது தாய் பரமேஸ்வரியிடம் அவரது மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தலையில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தலையில் கட்டுடன் இருக்கும் அருணாசலம், தன்னை மூன்று போலீஸார் அடித்ததாக அதில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் இன்று (ஜூலை 23) பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், “காவல்துறையினர் அடித்ததால் தான் அருணாச்சலத்திற்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே, இதற்கு உரிய நீதி வழங்க வேண்டும்; இல்லை என்றால் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

மேலும், அருணாச்சலத்தை நான்கு போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்றும், அந்த நான்கு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதற்கிடையில் அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை” என்றார்.

கன்னியாகுமரியில் மாற்றுத்திறனாளி இளைஞர் காவல்துறையில் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற புகார் அடங்குவதற்குள் தூத்துக்குடியில் அது போன்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *