
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 10-ம் தேதியன்று கரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை வழங்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை கடந்த 27-ம் தேதி விசாரித்த நீதிபதி, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து பணி ஆணை வழங்கி உள்ளது. எனவே, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



