
பள்ளி வளாகங்களில் அரசியல், மத, சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், பள்ளிகளுக்குள் தவெக நிர்வாகிகள் உள்ளே நுழைந்து முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வகுப்பறையில் வைப்பது, வகுப்பறையில் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்பட்டு வருவது சர்ச்சையானது. இந்த நிலையில், சிவகாசி அரசு பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசுப் பள்ளி மாணவியிடம் பேசிய வீடியோ வெளியானதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதனைத் தொடர்ந்து கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதே போல கோவை மாநகராட்சி பள்ளி மைதானத்திலும் ஆர்எஸ்எஸ்சின் ஷாகா பயிற்சி வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், கோவையில் அரசு பள்ளி மைதானத்தில் மீண்டும் ஷாகா பயிற்சி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டிய சிபிஐ (எம்.எல்.) உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள், கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்தன.
இந்த நிலையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் அரசியல், மதம் மற்றும் சாதி அமைப்புகளின் கூட்டங்களை நடத்த அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் “ தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் வளாகத்திலும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சாதி சங்கங்களின் நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்களிலும் இது பொருந்தும். எந்தக் காரணத்தைக் கொண்டும், பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மதச் செயல்பாடுகளுக்கு வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கூடாது.
அரசு நலத்திட்ட விழாக்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பள்ளி வளாகத்தைப் பயன்படுத்த வேண்டும். பள்ளிச் சுவர் மற்றும் வளாகத்தில் அரசியல், மதம் சார்ந்த சுவரொட்டிகள், விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், சின்னங்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகிகள், அரசாணையை மீறி அரசியல், மத நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையும் சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.



