
குளறுபடிகள் ஆய்வு செய்யப்படும் வரை மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு கூடுதல் மின் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது; இந்த இணைப்புகள் மறு ஆய்வு செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்னை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ரீடிங் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.”என்று வலியுறுத்தியுள்ளார்.



