பல மடங்கு மின் கட்டண உயர்வு… மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்

மின் கட்டண புகார் குறித்து சந்தேகம் எழுப்பிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு 500 யூனிட்டிற்குள் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், எப்போதும் 400 ரூபாய் என்ற அளவில் வந்த மின் கட்டணம் கடந்த மாதம் 1200, 3000 என பல மடங்கு அதிகமாக வந்த்து.

இதுதொடர்பாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஒரு சில இடங்களில் மின் கட்டணம் அதிகம் வந்ததை மின்சார வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மின்சார கணக்கீடு குளறுபடி, பழைய மின் மீட்டர் ஆகியவைதான் காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிகளவு மின் கட்டணம் வந்ததாக புகாரையடுத்து சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளில் மறுஆய்வு செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.கஸ்டாலின் இன்று (ஜூலை 31) அவரது எக்ஸ் தளத்தில் “3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோடைகாலத்தில் அதிக அளவில் ஏ.சி உள்ளிட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துவதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 11.50 லட்சம் பேருக்கு மூன்று மடங்கு கட்டணம் வந்தது. தற்போது 9. 60 லட்சம் பேருக்கு மூன்று மடங்கு கட்டணம் வந்துள்ளது. இது குறித்து வழக்கமான ஆய்வுகளை செய்கிறோம். இதனால் சமூக வலைதளத்தில் வரும் தகவல்களை வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறான தகவல். வாட்ஸ் அப் மூலம் யாரோ கூறும் தகவல்களை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பக் கூடாது” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *