
அதிமுக, திமுக ஆட்சிக் கால திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்று தவெக அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று(ஆக.5) தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கை குறித்துஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை; தவெக ஆட்சியின் 85 நாட்களில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரீல்ஸ், மீம்ஸ்தான் சாதனையாக பேசுகின்றனர்.
தேர்தல் நேரத்தின் போது பெண்களுக்கு மாதம் ரூ2,500 தருவோம்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ4,000 வழங்குவோம் என விஜய் வாக்குறுதி அளித்தார். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ20,000 வழங்குவோம்; பெண்களுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம்; குடும்பங்களுக்கு ரூ25 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற தேர்தல் கால வாக்குறுதிகள் எதனையுமே இந்த பட்ஜெட்டில் தவெக அரசு நிறைவேற்றவில்லை.
தவெக ஆட்சிக் காலத்தில் ரூ20,000 கோடி கடன் வாங்கி உள்ளனர். தமிழக அரசின் கடனை எப்படி திருப்பி செலுத்தப் போகிறது? ஒரு குழுவை அமைத்துவிட்டால் அந்த குழு எப்படி வருவாயைப் பெருக்கும்? கடன் வாங்கித்தான் தவெக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என்கிற நிலைதான். அதிமுக, திமுக ஆட்சிக் கால திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது விஜய் அரசு. பட்ஜெட் என்ற பெயரில் பழைய திட்டங்களின் பெயர்களில் ‘வெற்றி’ என்ற பெயரை சேர்த்துவிட்டனர். அதிமுக ஆட்சிக் கால தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா ஆடு மாடுகள் திட்டம் ஆகியவற்றைதான் செயல்படுத்துகின்றனர். நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு எங்கே போனது நிதி? விஜய் அரசின் இந்த பட்ஜெட்டுக்கு ஜீரோ மார்க்தான் கொடுக்க முடியும். இந்த பட்ஜெட்டில் என்னதான் இருக்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.



